நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை ஒட்டி ஜூலை 19-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. Parliament
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர்; இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
அப்போது, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனே மத்திய அரசு கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்தது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21-ந் தேதி வரை நடைபெறும்.
இக் கூட்டத் தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, காஷ்மீர் பிரச்சனையில் டிரம்ப் தலையீடு, இஸ்ரேல்- ஈரான் யுத்தம், மகாராஷ்டிரா விவசாயிகள் தற்கொலை, இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஜூலை 19-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.