2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 1) டெல்லியில் தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது, துணை நடிகருக்கான விருது என மூன்று விருதை பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்த பார்க்கிங் திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பாராட்டை பெற்றது. கார் பார்க்கிங் இடத்தை பிடிப்பதில் ஒரு இளைஞருக்கும் முதியவருக்கும் இடையே நிலவும் ஈகோ மோதலையும், அதன் உச்சக்கட்ட நிலையையும் சுவாரசியமாக எடுத்துக்கூறியது பார்க்கிங்.
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை இயக்குநர் ராம்குமாரும், சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கரும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை சோல்டர்ஸ் பேக்டரி நிறுவன தயாரிப்பாளர் சினிஷும் வென்றுள்ள நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத் தயாரிப்பாளர் சினிஷ் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”71வது தேசிய திரைப்பட விருதுகளில் பார்க்கிங் 3 விருதுகளை மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் விருதுகளை வென்றுள்ளது.
அதே போன்று ஆஸ்கர் அகாடமியிலிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்ததும், அவர்களின் நூலகத்தில் எங்கள் திரைக்கதையை வைத்து கௌரவித்த தருணம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
இப்போது, இது எங்கள் அடுத்த சிறந்த முயற்சியை தொடர்ந்து வழங்க எங்களை உண்மையிலேயே ஊக்குவிக்கும் ஒரு மைல்கல்.
இப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் தொலைநோக்கு பார்வையாளரான இயக்குநர் ராம்குமாருக்கும், இந்த தொலைநோக்கு பார்வையை ஆதரித்த எனது கூட்டாளியான சுதனுக்கும் நன்றி. இது எங்கள் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என அவர் தெரிவித்துள்ளார்.