பராசக்தி படத்தை ஓடிடியில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பராசக்தி. ஜனவரி 10ஆம் தேதி வெளியான இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் பராசக்தி திரைப்படத்தை ஓடிடி மற்றும் பிற தளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் இன்று (பிப்ரவரி 6) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், ‘பராசக்தி தயாரிப்பாளர், இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். வருண் ராஜேந்திரன் ‘செம்மொழி’ என்ற தலைப்பில் 56 பக்கங்கள் கொண்ட ஒரு திரைக்கதையை எழுதி, அதனை ஜனவரி 27, 2010 அன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்தார். அதே திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து, தற்போது ‘பராசக்தி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கின்றனர்’ என்று வாதம் முன்வைத்தார்.
இதற்கு தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ”‘பராசக்தி’ திரைப்படத்தின் இயக்குநரான சுதா கொங்கரா தான் அந்தப் படத்தின் உண்மையான திரைக்கதை ஆசிரியர். இந்த படத்தின் கதை தனிநபரின் கற்பனையல்ல. ஆவணப்படுத்தப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றிலிருந்து உத்வேகம் பெற்று இந்த கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
திரைப்படத்தில் காட்டப்படும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான உறவுகள், கதையின் போக்கு, அவர்களின் உந்துதல், வசனங்கள், நாடகத்தனமான சம்பவங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணங்கள் ஆகியவை முழுமையாகக் கற்பனையானவை. அவை இயக்குநராலும் அவரது குழுவினராலும் சுயமாகவும், தனித்துவமாகவும் உருவாக்கப்பட்டவை” என்று வாதங்களை முன்வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கு விசாரணையை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
