இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தில் சிவாவின் ஜோடியாக நடித்தவர் கிரேஸ் ஆண்டனி. அந்த பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் அனைவருமே அவரது நடிப்பைப் புகழ்ந்து தள்ளினார்கள். ’ஹேப்பி எண்டிங்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ரோர்சா, ‘நுனக்குழி’, ‘எக்ஸ்ட்ரா டீசண்ட்’ என்று இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது இவர் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறார். மெல்லிய சங்கிலியை அவர் அணிந்திருக்க, உடன் இருக்கும் ஆண் அதனை ரசிப்பதாக இருக்கிறது ஒரு புகைப்படம்.
கூடவே, ‘சத்தங்கள் இல்லை; விளக்குகள் இல்லை; கூட்டம் இல்லை. இறுதியாக, அதனை நாங்கள் நடத்திவிட்டோம்’ என்ற வரிகள் உடன் ‘ஜஸ்ட் மேரிட்’ என்ற வார்த்தைகளையும் பதிவிட்டிருக்கிறார்.

சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ரஜிஜா விஜயன், நைலா உஷா, சானியா அய்யப்பன், ஸ்ரீந்தா எனப் பல மலையாளத் திரையுலக பிரபலங்கள் இந்த பதிவினை ‘லைக்’ செய்ததுடன், ‘வாழ்த்துகள்’ தெரிவித்துள்ளனர்.
மேற்சொன்ன புகைப்படங்களில் இருப்பது கிரேஸ் ஆண்டனி என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரத்தில் மணமகன் அடையாளம் எதுவும் தெரியவில்லை.
திரையுலக நட்பு வட்டாரத்திற்குத் தெரியாமல் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதுவே ரசிகர்களை இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கிரேஸ் ஆண்டனி தனது மௌனத்தைக் கலைக்கும் வரை, மணமகன் யார் என்பது ‘சஸ்பென்ஸ்’ ஆகவே இருக்கும்..!