பொதுவாக பிரபலங்கள் மேடைகளில் பேசுவது போலவே, யதார்த்தத்திலும் இருப்பார்களென்று எதிர்பார்க்க முடியாது. பல வேளைகளில் சில கேள்விகளுக்கான பதில்கள் ‘டிப்ளமடிக்’காக தெரியும். அதாகப்பட்டது, எந்த வம்புதும்பிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று ‘உஷாராக’ பதிலளிப்பார்கள். மிகச்சில நேரங்களில் அதனை மீறி அவர்களது ‘உள்ளக் கிடக்கை’ வெளிப்பட்டுவிடும்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நாயகன் நாயகியாக நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ வசூலில் பின்னியெடுக்கிறது. இந்த வாரம் இப்படம் தெலுங்கிலும் ‘ரிலீஸ்’ செய்யப்படுகிறது.

சைரா நரசிம்ம ரெட்டி, உப்பெண்ணாவை அடுத்து தமிழ் தெலுங்கில் தயாராகும் இயக்குனர் பூரி ஜெகன்னாத் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தெலுங்கில் அவ்வப்போது நடித்தாலும், அவற்றை ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றிகளாக இருக்குமாறு பார்த்துக் கொள்பவர் நித்யா மேனன்.
இருவரது காம்பினேஷனில் வெளியாகிறது என்பதால், டப்பிங் படம் என்பதையும் மீறி தெலுங்கு திரையுலகில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அங்கு இப்படம் ‘சார் மேடம்’ என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாதில் நடந்தபோது, வழக்கம்போல ‘படப்பிடிப்பின்போது பரோட்டா நிறைய சாப்பிட்டீங்களா’ என்பது போலச் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
அவற்றினூடே, ‘இந்த படத்தை போன வாரமே ஏன் தெலுங்கில் ரிலீஸ் பண்ணலை’ என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ வெளியானதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது என்று தகவல்கள் வெளியான நிலையில் இது கேட்கப்பட்டாலும், அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி ‘இது புரொடியூசர் சார்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி’ என்று சத்யஜோதி தியாகராஜனைக் குறிப்பிட்டார். அவர், அதற்குப் பதில் சொல்லவே இல்லை.
’தெலுங்கு ட்ரெய்லரில் உங்க வாய்ஸ் அருமை’ என்றொரு பத்திரிகையாளர் சொன்னதற்கு, ’அது என்னோட வாய்ஸ் இல்ல. குரல் கொடுத்த அந்த டப்பிங் கலைஞரோட மிமிக்ரிக்கு தான் இதுக்காக நன்றி சொல்லணும்’ என்றார்.
‘நீங்க கல்யாணம் செஞ்சுப்பீங்களா’ என்ற ரகத்தில் நீளமாகக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, இந்த படத்தின் படப்பிடிப்பின்போதே விஜய் சேதுபதி, பாண்டிராஜ் போன்றவர்கள் ’திருமண வாழ்க்கை முக்கியம்’ என்று தன்னிடம் சொன்னதாகத் தெரிவித்தார்.
இது போன்ற கேள்விகளுக்கு நடுவே, தெலுங்கில் படம் இயக்கினால் எந்த ஹீரோவை நடிக்க வைக்க ஆசை என்ற கேள்வி இயக்குனர் பாண்டிராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நானி’ என்று பதிலளித்தார்.
பொதுவாக இது போன்ற கேள்விக்கு வேறு பிரபலங்களாக இருந்தால் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா அல்லது பிரபாஸ், பவன் கல்யாண், மகேஷ்பாபு என்று ’சாத்தியமாவது கடினம்’ என்பது போன்ற ‘சாய்ஸ்’களையே குறிப்பிடுவார்கள். ’அவரை வைத்து ஏன் படம் இயக்க விருப்பப்படுகிறீர்கள்’ என்று கேட்டபோது, ‘தெலுங்கில் அவர் தான் என்னோட பேவரைட்’ என்று பதிலளித்தார்.
’தலைவன் தலைவி’யில் நித்யா மேனன் தான் நாயகியாக நடிக்க வேண்டுமென்று பல மாதங்கள் காத்திருந்ததாகச் சில பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வகையில், அவர் தீர்மானமாகச் சொன்ன நானியைக் கொண்டு தெலுங்கில் படம் இயக்கத் தயாரானால் அதில் ஆச்சர்யம் இல்லை.