தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 11) 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 6 கிராம சபைக் கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேசுகையில்,
”கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் இன்று நடத்தப்படுகின்றன. இதில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார். இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டங்களில், உடனடியாக செய்யப்பட வேண்டிய 3 அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறியிருக்கிறோம். நம்ம ஊரு நம்ம அரசு என்ற திட்டத்தின்படி ஊராட்சியில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்வருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.