ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி

Published On:

| By Mathi

Afghanistan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், காபூலில் உள்ள ‘ஓமித்’ போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனையை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. 2,000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட இதுவரை 400 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 250 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது மனிதநேயத்திற்கு எதிரான போர் குற்றம் என்றும், சர்வதேச விதிகளை மீறிய செயல் என்றும் தலிபான் தரப்பு கடுமையாகச் சாடியுள்ளது. எனினும், பாகிஸ்தான் அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தாங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களையோ அல்லது மருத்துவமனையையோ தாக்கவில்லை என்றும், பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கியதாகவும் பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2026 பிப்ரவரி மாத இறுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்குள் நிகழும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வான்வழித் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share