கர்நாடகாவில் உள்ள பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று மாநில அமைச்சரவை இன்று (அக்டோபர் 9) தெரிவித்துள்ளது.
உழைக்கும் பெண்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டும், ஆதரவான பணிச்சூழலை மேம்படுத்துவதற்காகவும், பெண் ஊழியர்களுக்கு உடல் மற்றும் மன ஆறுதலை உறுதி செய்வதையும், மாதவிடாய் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முடிவை எடுத்ததாக மாநில அரசு கூறியுள்ளது.
கர்நாடகா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், ஆடைத் தொழில்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை உழைக்கும் பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் குறிப்பிட்டுள்ளார்.
பீகார், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து பெண்களுக்கான முக்கிய நடவடிக்கையாக மாதவிடாய் விடுமுறை அளிக்க கர்நாடகா முன்வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே, சொமேட்டோ, ஸ்விக்கி, லார்சன் & டர்போ, பைஜூஸ் மற்றும் கோஜூப் ஆகிய நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.