தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான நடிகர் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ திரைப்படம், அவரது 50 ஆண்டுகால சினிமா பயணத்தை கெளரவிக்கும் வகையிலும், டிசம்பர் 12 அன்று வரும் அவரது பிறந்தநாளையொட்டியும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
‘படையப்பா’ படத்தின் கதைக்கரு, ரஜினிகாந்தின் சிந்தையில் உருவானது என்பது பலருக்கும் வியப்பளிக்கும் தகவல். கல்கியின் புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதைநாயகிகளில் ஒருவரான நந்தினி கதாபாத்திரத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்ட ரஜினி, அந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்க விரும்பியதாக கூறியுள்ளார்.
இந்தக் கதை யோசனையை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் சொன்ன போது, அவர் தனது தனித்துவமான பாணியில் திரைக்கதை மற்றும் வசனங்களை கச்சிதமாக உருவாக்கினார் என்றும் கூறியுள்ளார்.
அந்தவகையில் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும், நீலாம்பரி கேரக்டரில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ரஜினி முயற்சித்தாராம். ஆனால் எவ்வளவு முயன்றும் ஐஸ்வர்யா நேரம் கொடுக்கவில்லை என்றும் பின்னர்தான் அவருக்கு இந்த கேரக்டர் பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது என்றும் ரஜினி பகிர்ந்துள்ளார்.
மேலும் ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்தது, சிவாஜி இந்த படத்தில் நடித்து அசத்தியது என படத்தின் தலைப்பு முதல் பஞ்ச் டயலாக் வரை பல தகவல்களை கூறியிருக்கிறார் ரஜினி.
