படப்பிடிப்பில் கார் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்புக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார். pa ranjith voice out for stunt master mohan raj
தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் ’வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி கார் சண்டைக்காட்சியின்போது விபத்தில் சிக்கி பிரபல கார் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) உயிரிழந்தார்.
இதனையடுத்து அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என இயக்குநர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது 3 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மோகன்ராஜ் உயிரிழந்தது தொடர்பாக இதுவரை பா.ரஞ்சித் எந்த விதமான வருத்தமும் தெரிவிக்காத நிலையில், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
அதில், “ ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜ் நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள், குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.
எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மோகன் ராஜ் அண்ணன் , தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.
இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.