மலையாளத்தில் ‘பேரறியாதவர்’, ’வலிய சிறகுள்ள பக்ஷிகள்’, ‘காடு பூக்குன்ன நேரம்’, ‘சாய்ரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டாக்டர் பிஜு என்ற பிஜு தாமோதரன். 2023இல் இவர் இயக்கிய ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ வெளியானது. இதில் டொவினோ தாமஸ், நிமிஷா சஜயன் நடித்திருந்தனர்.
கமர்ஷியல் சினிமா வெளியைத் தாண்டி கலைப்பூர்வமான படைப்புகளைத் தருவதில் ஆர்வம் உள்ளவர் டாக்டர் பிஜு. இவர் ஆங்கிலம், இந்தி, பஹாரி மொழிகளிலும் படம் இயக்கியுள்ளார். தற்போது பப்புவா நியூகினியா நாட்டின் ‘டோக் பிசின்’ மொழியில் ‘பப்பா புகா’ எனும் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டுப் படங்கள் பிரிவுக்கு பப்புவா நியூகினியாவின் சார்பில் அனுப்பப்படும் முதல் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
பப்புவா நியூகினியாவைச் சேர்ந்த பழங்குடியின மக்களில் சிலர் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்டதையும், அவர்களுக்கான முக்கியத்துவம் உலக வரலாற்றில் எந்தளவுக்கு உள்ளது என்பதையும் இப்படம் பேசுகிறதாம். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘பப்பா புகா’ ட்ரெய்லர் அதனை உணர்த்துகிறது.
இப்படத்தில் இருக்கிற இன்னொரு ஆச்சர்யம், தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் பா.ரஞ்சித் இதில் இடம்பெற்றிருப்பது. ‘பப்பா புகா’வின் தயாரிப்பாளர்களில் ஒருவராக ரஞ்சித்தும் இருக்கிறார். இதன் மூலமாக, அவரது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ இதன் டைட்டிலில் இடம்பிடித்துள்ளது.
ரிக்கி கெஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் போபரோ, ஜான் சைக், ரிதாபரி சக்ரபர்த்தி, பிரகாஷ் பாரே உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 19ஆம் தேதியன்று ‘பப்பா புகா’ தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.