காங்கிரஸ் தலைமை அறிவித்ததன்படி, திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்; விஜய் பற்றி எல்லாம் கேள்வி கேட்காதீர்கள் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் நேற்று (டிசம்பர் 27) செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைமை அறிவித்ததைத்தான் நான் சொல்ல முடியும். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அவர்களோடு தேர்தல் உடன்பாடு, தொகுதிகள் பங்கீட்டுக்காக 5 பேர் கொண்ட கமிட்டி நியமிச்சிருக்காங்க…
அந்த 5 பேர் கமிட்டி, ஒரு முறை திமுக தலைவரை (முதல்வர் ஸ்டாலினை) சந்தித்திருக்கிறார்கள். அவர், “நான் ஒரு கமிட்டி அமைப்பேன்.. நான் கமிட்டி அமைத்த பிறகு இரண்டு கமிட்டிகளும் பேசலாம்”னு சொல்லி இருக்கிறார். இரண்டு கமிட்டிகளும் பேசி, அவர்கள் தலைவர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்… தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள்” என்றார்.
அப்போது, விஜய் தவெக குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “அதைப்பற்றி எல்லாம் கருத்து கேட்காதீங்க.. தலைமையின் அறிவிப்பின்படி திமுக கூட்டணியில் இருக்கிறோம்.. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கமிட்டி அமைத்திருக்கிறோம். அந்த கமிட்டி பேசிய பிறகு அறிக்கை தந்த பிறகு இரு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்” என மீண்டும் அதே பதிலைத் தெரிவித்தார் ப.சிதம்பரம்.
