மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது நமது வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறி வருவதற்கு மேலும் ஒரு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த மோதல் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கவலைகள் எழுந்துள்ளதோடு, பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ஐநா தீர்மானமும் இந்தியாவின் ஆதரவும்:
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தை இந்தியாவும் முன்மொழிந்தது.
இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்த சீனா, “இந்த மோதலின் உண்மையான காரணத்தைத் தீர்மானம் பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்தது. ரஷ்யாவும் இது ஒருதலைப்பட்சமான தீர்மானம் என்று விமர்சித்துள்ளது.
ப.சிதம்பரம் கடும் விமர்சனம்:
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று
ஐ நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் நாட்டைக் கண்டனம் செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது
ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை
ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை
எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை?”தெரிவித்துள்ளார்.
