கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்த போது எங்கள் கோரிக்கைகள் காது கொடுத்து கேட்கப்படாமல் இருந்தன என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை இரண்டாகக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5 சதவிகிதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் வரி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால், சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பான்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் எல்பிஜி, சிஎன்ஜி கார்களுக்கு 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹேர் ஆயில், ஷாம்பூ, டூத் பேஸ்ட், சோப் உள்ளிட்ட பொருட்களுக்கு 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது, வெண்ணெய் போன்ற பால் பொருட்களுக்கு 12 சதவிகிதத்திலிருந்து ௫ சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் பால் பாட்டில்கள், டயப்பர்கள் மற்றும் பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்களுக்கு 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி சார்ந்த உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றும் இரண்டாவது நாளாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதற்குப் பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
8 ஆண்டுகள் தாமதம்
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில்,”ஜிஎஸ்டி தரநிர்ணயம் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களைக் குறைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இது 8 ஆண்டுகள் தாமதமாக வந்துள்ளது.தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இதுவரை நிலவிய விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் அமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தன. அரசாங்கத்தை இந்த மாற்றங்களைச் செய்யத் தூண்டிய காரணங்களை ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும்:
மந்தமான பொருளாதார வளர்ச்சியா?
பெருகிவரும் குடும்பக் கடன்களா?
குறைந்து வரும் குடும்ப சேமிப்புகளா?
பீகார் தேர்தல்களா?
டிரம்பின் வரி விதிப்பா?” என சரமாரியான கேள்விகளை முன் வைத்துள்ளார் ப.சிதம்பரம்.