கூடலூர் வந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணியளவில் கூடலூருக்கு வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கூடலூரில் புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த அவர், தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார்.
தொடர்ந்து அங்கு பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில், பொங்கல் வைத்து அதனை பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி பேசிய ராகுல் காந்தி, “தகவல் தொழில்நுட்பப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு (Data) ஆகியவற்றைப் பற்றி நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். தகவல்கள் மிக எளிதாகவும் தாராளமாகவும் கிடைக்கக்கூடிய ஒரு ‘தகவல் யுகத்தில்’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு பள்ளியின் உண்மையான பணி என்பது, அந்தத் தகவல்களை உற்று நோக்கி, அவற்றை அறிவாகமாற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றை விவேகத்துடன் பயன்படுத்தத் தெரிந்த மனிதர்களை உருவாக்குவதுதான்.
இந்தத் தகவல் யுகத்தில் நம்மிடம் விவேகம் இல்லை என்றால், வெறும் தகவல்களால் மட்டுமே நாம் ஈர்க்கப்பட்டால், இந்த உலகம் மிகவும் விரும்பத்தகாத இடமாக மாறிவிடும்
எனவே, இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக மாற்றும் இத்தகைய பள்ளிகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு
பள்ளிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்திற்காகவும் இந்த மகத்தான பணியைச் செய்து கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
ஜனநாயக இந்தியாவில் உங்களுக்கும், எனக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு குரல் இருக்கிறது. அந்த அடிப்படை உரிமையே ஒரு தேசத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆனால் இன்று நமது குரல் அதிகாரத்தில் இருப்பவர்களால் நசுக்கப்படுகிறது. அவர்கள் தேர்தல் ஆணையத்தையும் நமது நிறுவனங்களையும் தாக்குகிறார்கள். அவர்களின் சித்தாந்தத்துடன் உடன்படாத மக்களை அச்சுறுத்துகிறார்கள்.
எனவே, உங்களைப் போன்ற தைரியமான, தன்னம்பிக்கை கொண்ட, கேள்வி கேட்க பயப்படாத இளைஞர்கள் எங்களுக்குத் தேவை” என்று மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.
