உலகில் தொழில்நுட்பம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் மனிதர்களை போலவே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படக் கூடிய (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மென்பொருட்கள் மற்றும் மிண்னணு கருவிகள் அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இது போன்று பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் நேற்று (ஜூலை 9) ஒடிசா மாநிலத்தில் உள்ள செய்தி நிறுவனமான ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் (OTV) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மாநிலத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒடிவி நிர்வாக இயக்குனர் ஜாகி மங்கட் பாண்டா கூறுகையில், “ ஒரு காலத்தில் கணினி என்பது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. இப்போது இணையத்தில் பலரும் அதிக நேரங்களை செலவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அதனால் தான் தொலைக்காட்சி பத்திரிகை துறையில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள எங்கள் நிறுவனம் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தி மற்றொரு மைல் கல்லை உருவாக்கியுள்ளது.
இப்போது AI இன் பயன்பாடு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொடங்கியுள்ளது. AI செய்தி வாசிப்பாளரான லிசா இனி பல்வேறு மைல்கல்லை எட்டுவார். இலவசமாக ஒளிபரப்பப்படும் மாநில செய்தி தொலைக்காட்சிகளில் லிசா தான் முதல் AI செய்திவாசிப்பாளர். 1997 ஆம் ஆண்டு எங்கள் ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் பயணத்தை தொடங்கினோம்.OTV கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து ஒடிசாவில் நம்பர் ஒன் சேனலாக இருப்பதற்கு காரணம் எங்களின் புதிய நோக்கங்கள் தான்.
இன்று உள்ள பார்வையாளர்கள் செய்திகளின் எண்ணிக்கையில் ஆர்வம் காட்டுவது இல்லை அவர்களுக்கு வழங்கக்கூடிய செய்திகளில் சில புதிய கோணங்களை காண்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் AI யின் பங்களிப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
OTV இன் டிஜிட்டல் பிசினஸ் ஹெட் லித்திஷா மங்கட் பாண்டா இது குறித்து பேசுகையில், “ இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இது எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கூகுள் கூட ஒடியாவை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால் எங்களால் இதை சரியாக செய்ய முடிந்தது.

ஒடிசாவில் மட்டும் இல்லாமல் இந்தியாவின் முதல் AI ஒடியா செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இது செய்திகளை வழங்குவதில் ஒரு புதிய அற்புதமான வளர்ச்சி.
AI செய்தி வாசிப்பாளர் லிசாவை பொறுத்தவரை பல மொழிகளை பேசும் திறனை கொண்டிருந்தாலும், தற்போதைக்கு எங்கள் நிறுவனத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே செய்திகளை வழங்குவார்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற அனைத்து முக்கிய சமூக வலைதளங்களிலும் நீங்கள் இனி லிசாவை காணலாம்” என்று கூறினார்.
Meet Lisa, OTV and Odisha’s first AI news anchor set to revolutionize TV Broadcasting & Journalism#AIAnchorLisa #Lisa #Odisha #OTVNews #OTVAnchorLisa pic.twitter.com/NDm9ZAz8YW
— OTV (@otvnews) July 9, 2023
அதேநேரம் இந்த புதிய தொழில் நுட்பத்தை சிலர் விரும்பினாலும் இதுபோன்ற தொழில் நுட்பங்கள் பலரை வேலை இழக்கச்செய்துவிடும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பரங்கிமலை கொலை : குண்டர் சட்டம் ரத்து!
விரைவில் டாஸ்மாக் கடைகளில் ’கட்டிங்’ பாட்டில்: அமைச்சர் முத்துசாமி
