FEATHERS ON THE CROWNஆ OTHERS படம்?
மனிதர்களை பால் ரீதியாகப் பிரிக்கும் பதிவுகளில் ஆண் (MALE), FEMALE (பெண்) , தவிர OTHERS (மற்றவை) என்று ஒரு பிரிவு இருக்குமில்லையா? அதுதான் படத்தின் அடிநாதம் .
இரவில் முக்கியச் சாலையின் நடுவில் பெரிய கல்லை வைத்து, அதில் மோதி நிற்கும் வாகனங்களில் இருந்து, கொள்ளையடிக்கக் காத்திருக்கிறான் ஒருவன். அப்படி ஓர் வேன் வந்து மோதி காற்றில் பறந்து விழுந்து வெடித்து நெருப்பு பற்றி , அதில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்து கருகிப் போயிருக்கிறார்கள் .
விசாரிக்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் (அறிமுகம் ஆதித்யா மாதவன்) அவரது காதலி ஒரு டாக்டர் ( கவுரி கிஷன்) ஏசி-யின் படையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் ( அஞ்சு குரியன்) உண்டு .

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி இறந்த அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் எரிக்கப்படும் முன்பே காயப்படுத்தப்பட்டு இருக்கிறாள். அந்த ஆண் உடல் வேனின் மேலே வெளிப்பக்கம் கிடந்தபடி எரிந்து இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது
விசாரணை தொடர , மருத்துவர் காதலி வேலை செய்யும் செயற்கைக் கருத்தரித்தல் மையத்தில் கருமுட்டைக்குள் விந்தணு செலுத்தப்பட்டு பிறகு, அந்தக் கருவை வயிற்றில் செலுத்தி கரு வளர்ந்து பிரசவிக்கும் சிகிச்சையில் ஒரு முறைகேடு கண்டு பிடிக்கப்படுகிறது .
அதாவது செயற்கைக் கருத்தரித்தல் முறையில் பிறக்கும் குழந்தைகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத இடைப்பட்ட இனக் குழந்தைகளாக வளர்வதற்கான ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது .

வேனில் இறந்த பெண்கள் எல்லோரும் கண் பார்வையற்ற நபர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் கருணை கோயில் என்ற அனாதை இல்லத்தில் இருந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொல்லப்பட்டு இருப்பதுவும் தெரிய வருகிறது . கணவர்கள் எல்லாம் ரவுடிகள் என்பதும் புரிகிறது.
பார்வையற்ற பெண்கள் கொலை வழக்கும் கருத்தரித்தல் மையம் சம்மந்தப்பட்ட அதிர்ச்சியும் ஒரு புள்ளியில் ஒன்று சேரும்போது நடந்தது என்ன என்பதே
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த் , ஹரிஷ் பெராடி, நண்டு ஜெகன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கி இருக்கும் அதர்ஸ் . இதே பெயரில் ஒரு ஆங்கில சூப்பர் நேச்சுரல் சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படம் உண்டு.
ஒரு சிறுபான்மை தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டால், அந்தச் சிறுபான்மை தங்களைப் பெரும்பான்மையாக்கிக் கொள்ள எந்த எல்லைக்கும் போகும் என்பதுதான் இயக்குனர் சொல்ல வரும் கருத்து .
ஜிப்ரனின் அருமையான பின்னணி இசை இல்லாவிட்டால் படத்தின் முதல் காட்சியே சுமையாக ஆகி இருக்கும் என்ற அளவுக்கு நீளம். படம் முழுக்க சிறப்பாக இசைத்திருக்கிறார் ஜிப்ரான்.

கதையாக ஆரம்பம் சிறப்பாகவே இருக்கிறது . ஆனால் ‘அந்தப் படத்துல இருந்து அதை எடு…. இந்தப் படத்துல இருந்து இதை எடு.. கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத கனமான விஷயம் ஒன்றை சொல்லு,.அது நியாயமாக இருக்கத் தேவை இல்லை; வித்தியாசமாக இருந்தால் போதும்’ என்ற ரீதியில் திரைக்கதை போய் விடுவதை தவிர்த்து இருக்கலாம்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்தின் திரில் தன்மைக்கு நியாயம் செய்கிறது.
அழகான எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார் கவுரி கிஷன். நாயகன் ஆதித்யா மாதவன் , கேரக்டருக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் . அஞ்சு குரியன் போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்துகிறார் . சில காட்சிகளே என்றாலும் நண்டு ஜெகன் சிறப்பு,
வில்லன் நாயகியைத் துரத்த, அவளுக்கு நாயகன் செல்போனில் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தே போலீஸ் இருக்கும் பகுதிக்கு போக வைத்து வில்லனை மடக்கும் சீன் அருமை . ஜிப்ரான் இசை அங்கே பிரம்மாதம் .
கொலைகாரன் யார்? ஏன்? என்பதற்கான காரணம் அதுவரை பார்த்த படத்தின் தன்மையையே மாற்றி பலவீனம் ஆக்கி விடுகிறது. அவ்வளவு கனமான விசயம்.
கடைசியில் வரும் அந்த அதீத கனம் படத்துக்குப் பலன் தருமா?
இடைவேளையிலேயே அந்த சஸ்பென்சை ஓப்பன் செய்து, எதிர்த்தரப்பு நியாயத்துக்கான காரணத்தை இன்னும் வலுவாக அழுத்தமாக காட்சிகளில் சொல்லி, ஹீரோயிசத்தைக் குறைத்து யார் ஜெயிப்பார் பார்ப்போம் எனற சவாலையும் உருவாக்கி இருந்தால் படம் பார்ப்பவர்களால் இந்த கிளைமாக்ஸ் ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கும் .
OTHERS …. ONE OF THE OTHER(FILM)S
- ராஜ திருமகன்
