நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தான உறுப்பு குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டுசெல்லபட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 8-ந் தேதி மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏ.ஜி.-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை உயிர் காக்கும் நுரையீரல் தான உறுப்பை கொண்டு செல்வதற்கு , துரித போக்குவரத்து உதவியை வழங்கி முக்கிய பங்காற்றியது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்வே (Carriage And Ticket) திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவ குழுவினர், விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 02:07 மணிக்கு மீனாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் மெட்ரோ ரயிலில் ஏறி, ஏழு நிலையங்களைக் கடந்து, 02:28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பத்திரமாக வந்தடைந்தனர். அங்கிருந்து, மருத்துவக் குழு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தது. அங்குதான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது.
சென்னை மெட்ரோ ரயில், திறம்பட்ட நகரப் போக்குவரத்தை மட்டுமின்றி அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் பங்களித்து பொதுச்சேவைக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
