சென்னை மாநகராட்சி முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 13 வது நாளாக அவர்களது போராட்டம் நீடிக்கிறது. அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதாகவும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து போக மறுப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.