அமைச்சர் நேரு மீதான வழக்கு… நீதிமன்ற உத்தரவு என்ன? அதிமுக எம்.பி.இன்பதுரை விளக்கம்!

Published On:

| By Kavi

அமைச்சர் நேரு மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அதிமுக எம்.பி.இன்பதுரை விளக்கமளித்துள்ளார்.

தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) உத்தரவு பிறப்பித்தது. சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவரான அதிமுக எம்.பி. இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,

“திமுக அமைச்சர் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தேன். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில 1933  பணி நியமனங்களில் சுமார் 1020 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக 27.10.2025 அன்று அமலாக்கத் துறை ஒரு புகாரைத் தமிழக டிஜிபிக்கு அனுப்பியது.

ADVERTISEMENT

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பாக இந்த புகாரை அனுப்பியது. PMLA சட்டத்தின்படி  ரெய்டு நடத்திய போது இந்த ஆதாரங்கள் கிடைத்தது என்று அமலாக்கத் துறை கூறியது. 

PMLA  பிரிவு 66(2)-ன் படி ஒரு சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு  ஒரு தகவலைக் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.  அந்தச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று  சொல்லி வழக்குத் தொடர்ந்தேன். வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அந்த வேலைவாய்ப்பை பணத்தைப் பெற்றுக்கொண்டு கொடுத்துள்ளனர். 

ADVERTISEMENT

அந்தக் குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்திருக்க வேண்டுமா? இல்லையா?. கடைசியில் நீதிமன்றத்தில் நிவாரணம் கேட்டு,  இதில் நீதியைக் கொடுங்கள் என்று ஒரு வழக்கைத் தாக்கல் செய்தேன். இந்த வழக்கு நம்பர் ஆகல்வில்லை. அதை தள்ளுபடி செய்துவிட்டார்கள் என்று திமுகவினர் ஏளனமாகப் பேசினார்கள் .

இப்போது இந்த வழக்கில் என்ன நடந்தது என்றால்… வழக்கு விசாரணைக்கு வந்தபோது இன்பதுரை அதிமுக எம்பி, அவர் அரசியல் ஆதாயத்துக்காக இந்த வழக்கைத் தாக்கல்  செய்துள்ளார் என்று சொன்னார்கள். 

ஆனால் நீதிமன்றம், ‘ஒரு தனிமனிதன் நீதிமன்றத்துக்கு வரமுடியாத சூழ்நிலை நிலவுகிற ஒரு மாநிலத்தில், எதிர்க்கட்சியைத் தவிர… ஒரு எம்பியைத் தவிர வேறு யார் தாக்கல் செய்ய முடியும்? எனவே அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். வழக்கில் உள்ள மெரிட்டைச் சொல்லுங்கள் என்று கேட்டது.  உடனே தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ‘நாங்கள் முதல்கட்ட விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று சொன்னார். 

முதற்கட்ட விசாரணை இந்த வழக்கில் தேவையில்லை என்று நாங்கள் சொன்னோம்.  ஏனென்றால் முதற்கட்ட விசாரணைக்கு 180 நாட்கள் ஆகும்.  அதற்குள் குற்றம்சாட்டப்பட்ட நபர்  வெளிநாட்டுக்குத்  தப்பி சென்றுவிடுவார். ஆதாரங்கள் எல்லாம் அழித்துவிடுவார். எனவே உடனடியாக  எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். 

இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,  “இந்த வழக்கை கடந்த அக்டோபர் மாதம் கொடுத்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு,  நீங்கள் வழக்குப் பதிவு செய்யாத நிலையை பார்க்கும்போது, இந்த வழக்கை வேறொரு ஏஜென்சி  விசாரணைக்குக் கொடுத்துவிடலாம் என்று கூட நாங்கள் நினைத்தோம்” என்று கூறினர். 

ஆனால் நீங்கள் முதல்கட்ட விசாரணை நடத்துவதாக சொன்னீர்கள். இந்த வழக்கில் முதல்கட்ட விசாரணை தேவையில்லை.   ஏனென்றால் குற்றவாளிகள் தப்பித்து போய்விடுவார்கள்.  ஆவணங்கள் அழிக்கப்படும். வழக்கினுடைய சாராம்சத்துக்குத் தேவையான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பதால் உடனடியாக (forthwith)  எப்ஐஆர்  பதிவு செய்யுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். .

நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. உடனடியாக வழக்கைப் பதிவு செய்து அதன் மீது நடவடிக்கை  எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆதிநாராயணன் வழக்குக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எங்கள்  வழக்கு என்னவென்றால் இந்தப் பணியாளர்கள் நியமனத்தில் பெரிய ஊழல்  நடந்திருப்பதாக அமலாக்கத் துறை ரெய்டின் போது, கிளிஞ்சிங் எவிடன்ஸ் (Clinching Evidence – உறுதியான ஆதாரம்) கிடைத்திருக்கிறது.

அந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு  அமலாக்கத் துறை தூங்காது.   அதை டிஜிபிக்கு அனுப்பி வைத்தது. ஆனால்  டிஜிபி என்ன செய்தார்? அதை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்யச் சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம்.  அவர்கள் எதுவும் செய்யவில்லை என்பதால் அதிமுக சார்பில் வழக்குப் போட்டோம். 

அதிமுக முன்னாள் அமைச்சர்  வீட்டில் ரெய்டு  நடத்தினால்,  எப்போது  எப்ஐஆர் போடுவீர்கள் ? ஒரு விஏஓ-கிட்டயோ அல்லது  யார்கிட்டயோ ஒரு  புகாரை வாங்கி இரவோடு இரவாக எப்ஐஆர் போட்டு காலையில்  பல் விளக்குவதற்கு முன்பே  ரெய்டு நடத்த வந்துள்ளோம் என கதை தட்டுவீர்கள் தானே.  நீதி என்பது எல்லாருக்கும் பொதுவானதுதானே? ஆனால் நேருவுக்கு மட்டும் இவ்வளவு  தாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share