சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவு பிறப்பித்தது.
1996 முதல் 2021 வரையிலான திமுக ஆட்சியில் மருங்காபுரி திமுக எம்எல்ஏவாகவும் அறநிலையத்துறை அமைச்சராகவும் செங்குட்டுவன் பதவி வகித்தார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் 2001 இல் அதிமுகவில் இணைந்தார்.
திமுகவில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 81 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக செங்குட்டுவன் அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம், செங்குட்டுவன் மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து 2023ல் உத்தரவு பிறப்பித்தது.
செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்து விட்டதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
இந்த நிலையில் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இன்று (ஆகஸ்ட் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களை துவங்க மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சரின் மகன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து, அவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.