திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிர்வாக அதிகாரி, அறநிலையத் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தொடர்ந்து ஐந்து நாட்களாக நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.
இன்று (டிசம்பர் 18) நடந்த விசாரணையின் போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள அந்த கல், தீபத் தூண் தான் என்பதற்கு உரிய அனுபவ தரவுகளோ அல்லது ஆதாரமோ இல்லை.
தெளிவான மற்றும் உறுதியான ஆவணங்களோ ஆதாரங்களோ இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
கோயிலில் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா என்பதே இந்த வழக்கின் மைய கேள்வியாக இருக்கிறது.
திருப்பரங்குன்றம் கோயில், கலாச்சாரம், ஆகம விதிகள், பூஜை, அர்ச்சனை முறைகள, வழிபாட்டு உரிமைச் சட்டம் ஆகிய அனைத்தும் முறையாகவும் சட்டபூர்வமாகவும் உள்ளது. அதனை மாற்றும் வகையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது சரியல்ல.
திருப்பரங்குன்றத்தில் கோயில் நிர்வாகம் அறநிலையத்துறை தேவஸ்தானம் மற்றும் அறங்காவலர் குழு ஆகியோரின் ஒருமித்த முடிவின்படி தான் உச்சிப் பிள்ளையார் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் வழக்கமாக ஏற்றப்பட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்கள் கோயில் தரப்பிடம் உள்ளது.
1920 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்த போது மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். அப்போது தூண் இருந்திருந்தால் அது தீர்ப்பில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். தூண் தொடர்பாக எந்த குறிப்பும் இல்லை.
எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அறநிலையத் துறைக்கே உள்ளது. ஒரு கோயிலில் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் பழக்கங்களை திடீர் உத்தரவால் மாற்ற முடியாது” என்று வாதங்களை முன் வைத்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் வழக்கில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் என்ன? உயர் நீதிமன்ற தனி நீதிபதி இதுபோன்ற விவகாரங்களில் தலையிட முடியுமா?, அறநிலையத்துறை விதிகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், “தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என கூற முடியாது
பூஜை, அர்ச்சனை, தரிசனம் ஆகியவை தான் ஆகம விதிகளுக்கு உட்பட்டவை. கார்த்திகை தீபம் ஏற்றுவதில் எங்கும் ஆகம விதிகள் நடைமுறைப்படுத்தவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அதுபோன்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது.
