திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் நவாஸ் கனி எம்.பி. வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திரும்ப பெற முடிவு செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி தன்னை எதிர்த்து சுயேட்ச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தை விட 1.78 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் தேர்தல் வேட்பு மனுக்களில் உண்மையான தகவல்களை மறைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி நவாஸ் கனி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் இரண்டு முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தற்போது அவர் திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நவாஸ் கனிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற ஓபிஎஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து திருத்த மனு தாக்கல் செய்யும்படி ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
