வரும் தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெபாசிட் இழக்க வேண்டும் என ஓபிஎஸ் காட்டமாக விமர்சித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியில், திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன் இன்று (மார்ச் 24) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீர்செல்வம்,“தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்தபோது பெரும் எழுச்சியைக் கண்டேன். அந்த எழுச்சி இன்று தேனியிலும் எதிரொலிக்கிறது” என்றார்.
மேலும், “அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படியல்ல; அவர் சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டவர். நான் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டு, அவரிடமே மீண்டும் பொறுப்பை ஒப்படைத்தவன்” என்று கூறினார்.
அதேபோல் “கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக மட்டுமே உள்ளது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் 5 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை ஒரு நாளில் தகுதியானவர்களுக்குச் சென்றடைந்தது. 5,000 ரூபாய் வரை உரிமைத் தொகை வழங்கப்பட்டது தமிழகத்தில் மட்டுமே நடந்த சாதனை” என்றும் அவர் பேசினார்.
“சசிகலாவின் கணவர் மறைந்தபோது, அவருக்கு பரோல் வழங்கக்கூட எடப்பாடி பழனிசாமி மனமில்லாமல் மறுத்தார். அதேபோல், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அந்தச் சம்பவம் நடந்தபோது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.
“தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நான் கண்ட எழுச்சி, இன்று தேனியிலும் எதிரொலிக்கிறது. நாளைக்கே தேர்தல் வந்தாலும் திமுக மாபெரும் வெற்றி பெறும். வரும் தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெபாசிட் இழக்க வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாகப் பேசினார்.
