“தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும்” என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்ட அதிமுக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
அதேநேரத்தில் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்தார்.
தற்போது அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோரின் இடம் கேள்விக்குறியானது.
இருவரும் தங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தாலும், அவர்களுக்கான முக்கியத்துவம் இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக தற்போது தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக தமிழகம் வந்த அமித் ஷாவையும் சந்திக்க அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
இந்த நிலையில் அவரது அணியின் மூத்த ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பிடு போட்டு வெளியேறுவது நிம்மதி!
அதில் அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு ஆபத்தான கூட்டணி. பாஜகவை வளர்க்கக்கூடிய எந்தக் கூட்டணியுன் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காது. ஓபிஎஸ்-க்கு நன்மை இல்லை. தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். அவரை பாஜக புறக்கணிக்கிறது, அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்து கொள்ள வேண்டும். ‘மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன்’ என கும்பிடு போட்டு ஓபிஎஸ் வெளியே வருவதே நிம்மதி. நாட்டுக்கு நல்லது” என்றார்.
விஜய்யுடன் ஓபிஎஸ் சேரனும்!
மேலும் அவர், ”தற்போதைய தேர்தல் சூழ்நிலையை பொறுத்தவரை பாஸ் ஆகியுள்ளது திமுக மற்றும் விஜய் அணி மட்டுமே. அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக அணிக்கு இடமில்லை.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது திமுக – விஜய் என இரண்டுமுனை போட்டி மட்டுமே இருக்கும். திமுக கூட்டணியை எளிதில் வீழ்த்த முடியாது. விஜய், ஓபிஎஸ் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும். தென்மாவட்டங்களில் பலம் அதிகரிக்கும்” என பண்ருட்டி அறிவுறுத்தியுள்ளார்.