”அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” என்ற பெயரில் செயல்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென அதன் பெயரை, “ ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என மாற்றி உள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில், ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு”வை ஓபிஎஸ் உருவாக்கி செயல்பட்டு வந்தார். இதற்கான நிர்வாகிகளையும் ஓபிஎஸ் நியமித்து வந்தார்.

ஓபிஎஸ் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இதே பெயரிலேயே தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று ஓபிஎஸ் வெளியிட்ட 2 அறிக்கைகளிலும், ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” என்பது “”அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக” மாறி உள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கக் கூடும்; அந்த கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறலாம் என கூறப்பட்டு வருகிறது. தற்போது திடீரென ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என பெயரை ஓபிஎஸ் மாற்றியிருப்பதால் இதுதான் ஓபிஎஸ் தொடங்க போகும் கட்சியின் பெயரா? என்கிற குழப்பம் அவரது ஆதரவாளர்களிடையே உருவாகி உள்ளது.
