செல்லூர் ராஜூவுக்கும், தம்பிதுரைக்கும் ஆதரவாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட மாவட்டமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றிருந்தார்.
கீழடிக்கு சென்று திரும்பும் போது எடப்பாடி பழனிசாமியின் காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஏற முற்பட்டார்.
ஆனால் அவரை காரில் ஏறத் தடுத்த எடப்பாடி பழனிசாமி, “அண்ணே அண்ணே… வேற காரில் வாங்க” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, அன்வர் ராஜா, மைத்ரேயன் திமுகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அதிமுக எம்பி பதிலளிக்க முற்பட்டார். ஆனால் அவரை பேசவிடாமல், கையைத் தட்டி தடுத்தார்.
இந்த காட்சியும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்த சூழலில் இந்த இரு சம்பவங்களையும் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்ட தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா. தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.
அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு, அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங் கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள்.
தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு மதுரையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.
இதேபோன்று, எம்.ஜி.ஆர். காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், ஜெயலலிதா காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
“செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்” என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது அவர் இருக்கும் நிலை பாவமாக இல்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த செல்லூர் ராஜூ, “ஒரு தலைவரை தரக்குறைவாக பேசக்கூடாது. பாவம் என்றெல்லாம் ஒபிஎஸை செய்தியாளர்கள் சொல்லக்கூடாது. வார்த்தையை அளந்து பேச வேண்டும்” என கடுமையாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.