ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்வாரா? என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) ராணுவ நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று ஜூலை 29-ந் தேதி பிரியங்கா காந்தி பேசியதாவது: பஹல்காமில் 26 இந்திய குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? தாக்குதலுக்கான காரணம்தான் என்ன? பஹல்காமில் பயங்கரவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என சொன்னது மத்திய அரசு. மக்கள் காஷ்மீருக்கு செல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்தது மத்திய அரசு. பொதுமக்களை காஷ்மீரில் நிலம் வாங்குங்கள் என அழைத்தது மத்திய அரசு. ஆனால் அந்த காஷ்மீரில்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தினர் கண்முன்னாலேயே பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பவர்கள் யார்? என்பதுதான் கேள்வி. இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்குரியவர் பிரதமர் இல்லையா? உள்துறை அமைச்சர் இல்லையா? பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பு இல்லையா?
பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, ‘தீவிரவாதத்தை வென்றுவிட்டோம் என்றார். ஜம்மு காஷ்மீர் படுகொலைக்கு பொறுப்பேற்ற அமைப்பு எது? அதன் பின்னணி என்ன? இந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. அதனால்தான் இதற்கு பொறுப்பு யார் என கேட்கிறேன்?
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று யாராவது பதவி விலகினார்களா? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்தாரா?
நீங்கள் கடந்த கால வரலாற்றைப் பேசுகிறீர்கள்.. நான் தற்போதைய காலத்தின் நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறேன். 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நீங்கள்தான் இதற்கும் பொறுப்பேற்க வேண்டும். முந்தைய காலங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த போது உள்துறை அமைச்சர் பதவி விலகினார். இப்போது அப்படி நடக்கவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை ஏன் மத்திய அரசு நிறுத்தியது? நாம் பலமான நிலையில் நின்று தாக்குதல் நடத்தினோம்.. பிறகு ஏன் போர் நிறுத்தப்பட்டது? இதற்குதான் பதிலே இல்லையே.. இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.