ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் என்பது நாட்டின் உளவுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி சாடினார்.
மக்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை மீதான இன்றைய ஜூலை 28-ந் தேதி விவாதத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்த படுகொலையை கண்டிக்கிறேன்.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை எனில் உடனே வழங்க வேண்டும்.
பஹல்காம் படுகொலையைத் தடுத்திருந்தால் நாம் பெருமைப்படலாம். ஆனால் படுகொலை நிகழ்ந்துவிட்ட பின்னர், ‘நாங்கள் திருப்பித் தாக்கிவிட்டோம்; துல்லிய தாக்குதல் நடத்திவிட்டோம்’ என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது?
பஹல்காம் தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நாட்டின் உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, ஆட்சி நிர்வாகத்தின் தோல்விதான் பஹல்காம் தாக்குதல்.
நாட்டின் வெளியுறவுத் துறையும் தோல்வி அடைந்தது; அரசின் ஜம்மு காஷ்மீர் நிலைப்பாடும் தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் சுதந்திரம் மலரும் என்றீர்கள். அந்த 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர்தானே பஹல்காம் தாக்குதல் நடந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் குதிரை ஓட்டி ஒருவர்தான் உயிரிழந்தாரே தவிர எந்த ஒரு ராணுவத்தினரும் அங்கே உயிரிழக்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; ஜம்மு காஷ்மீரில் பஹகல்காம் தாக்குதலால் சுற்றுலா துறை பாதிப்படைந்துள்ளது; அதனால் சிறப்பு பொருளாதார நிதி உதவி வழங்க வேண்டும்
பாதுகாப்பு நிலைக்குழு பரிந்துரைப்படி விமானப் படையை பலப்படுத்தவில்லை. விமானப் படையின் 2 ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் சொல்கிறது. ரஃபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்பது தெரியவில்லை. ரஃபேல் விமானங்கள் கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை தேவைப்படுகிறது.
பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிக்கு டொனால்ட் டிரம்ப் விருந்து கொடுக்கிறார். இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் அமெரிக்காவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
உள்நாட்டிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்த வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.