Operation Sindoor ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசவே இல்லை என மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை குறித்து இன்று ஜூலை 28-ந் தேதி அனல் பறந்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஏப்ரல் 25-ந் தேதி முதல் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வரை எண்ணற்ற போன்கால்கள், உரையாடல்கள் நடைபெற்றன. நான் 27 முறை தொலைபேசியில் இது தொடர்பாக உரையாடினேன். பிரதமர் மோடி 20 முறை தொலைபேசியில் பேசினார்.

ஐநாவில் 193 நாடுகள் உள்ளன. இவற்றில் 3 நாடுகள்தான் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எதிர்த்தன.
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஏப்ரல் 22-ந் தேதி முதல் ஜூன் 17-ந் தேதி வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவே இல்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் அமெரிக்கா- இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசவில்லை.
நான் சீனாவுக்கு சென்றேன்.. அந்த பயணத்தின் போது பயங்கரவாதத்தைத் தடுக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன். ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப் போல ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தாமே தலையிட்டு நிறுத்தியதாக 25 முறை டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியா- பாகிஸ்தான் நாடுகளை அமெரிக்காவின் வர்த்தக ஒப்பநதங்களை சுட்டிக்காட்டி போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க வைத்தேன் என டிரம்ப் கூறியிருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையில் இன்றைய விவாதத்தின் போதும் எதிர்க்கட்சிகள், டிரம்ப்பின் பேச்சை சுட்டிக் காட்டியதால் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.