பஹல்காம் தாக்குதலின் போது சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் செல்லாமல் பீகார் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றதை மக்களவையில் Operation Sindoor குறித்த விவாதத்தின் போது சு.வெங்கடேசன் எம்பி சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
மக்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக இன்று ஜூலை 28-ந் தேதி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மதுரை மக்களவை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது; இந்த ஒவ்வொரு உயிரும் ஏற்படுத்திய வலியும் வேதனையும் அதிகம். (ஆளும் பாஜக எம்பிக்கள் குறுக்கீடு செய்தனர்; அப்போது திமுகவின் கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் பாஜகவினரை கண்டித்தனர்)

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக அரசு நடத்திய எதிர்வினை குறித்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இந்த அவையை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து முயற்சித்தோம்; இந்த முயற்சியை கடந்த 2 வாரங்களாக எதிர்க்கட்சிகள் எடுத்தோம். 2 மாதங்களாக பொறுப்புணர்ச்சி என்றால் என்ன விலை என கேட்டது ஆளும் கட்சி.
2016-ம் ஆண்டு உரி தாக்குதல், 2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதலின் போது சொல்லப்பட்டதையே இன்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மக்களவையில் சொல்கிறார்.
பஹல்காம் தாக்குதல் நடந்த போது ஒன்றரை மணிநேரம் கழித்துதான் அரசுக்கு தகவலே கிடைத்திருக்கிறது. ராணுவத்தின் தோல்வி, சிஆர்பிஎப்பின் தோல்வி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தோல்வி – ஆகியவற்றுக்கு யார் பொறுப்பேற்பது?
நீங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் நடந்த சம்பவங்களுக்கு நேரு முதல் மன்மோகன்சிங் வரை பொறுப்பேற்க சொல்கிறீர்களே.. இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பது?
பஹல்காம் தாக்குதலின் போது பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார்; அங்கிருந்து பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மோடி, நேராக பஹல்காம் செல்வார்.. காஷ்மீர் செல்வார் என எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் பீகார் தேர்தல் பிரசாரத்துக்குதான் சென்றார்.
எங்கள் எல்லோரது இதயங்களிலும் தேசம் இருந்தது; உங்களது இதயங்களில் தேர்தல்தான் இருந்தது. நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்றார் பிரதமர் மோடி. பஹல்காம் தாக்குதலின் போது இந்த கோவிலுக்கு வாருங்கள் என பிரதமர் மோடியை அழைத்தோம். இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு போல சிறப்பு கூட்டம் நடத்த அழைத்தோம். ஆனால் பிரதமர் மோடி வரவில்லை. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பேசினார்.