நமது நாட்டின் ராணுவத்தின் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி காட்டமாக விமர்சித்தார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: பயங்கரவாதத்தின் அடித்தளத்தை தகர்த்திருக்கிறது ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானை நேருக்கு நேராக, அந்நாட்டின் விமானப் படை தளங்கள்- கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தகர்த்தோம். பாகிஸ்தானின் விமான படை தளங்கள் இன்னமும் ஐசியூவில்தான் இருக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை- வெற்றிகரமான நடவடிக்கை. 10 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு நாம் எப்படி தயாரானோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்; அப்படி நாம் தயாராகாமல் இருந்தால் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருப்போம்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, இந்தியாவின் தற்சார்பு தன்மையை உலகமே பார்த்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளும் டிரோன்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. இந்தியாவின் வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியது இந்த நடவடிக்கை.
இந்தியாவின் முப்படைகளின் வலிமை இணைந்து வெளிப்படுத்தப்பட்டதால் பாகிஸ்தான் கிடுகிடுவென நடுங்கிப் போனது. தீவிரவாதத்தைக் குழி தோண்டி புதைக்க இந்தியா தயாராகவே இருக்கிறது. நாம் நமது ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி இருந்தோம். வெறும் 22 நிமிடங்களிலேயே பாகிஸ்தானுக்கு பதிலடி தந்தோம்.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் இழப்பு மிகப் பெரியது. ஆபரேஷன் சிந்தூரில் 3 பார்முலாக்களை இந்தியா கடைபிடித்தது. இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால் நாம் விரும்பிய முறையில் விரும்பிய காலத்தில் பதிலடி தருவோம் என காட்டினோம்; இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலை பொருட்படுத்தாது என்பதையும் காட்டி இருக்கிறோம்; தீவிரவாதத்தைப் பாதுகாப்பவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசமே இல்லை என்பதையும் நிரூபித்துள்ளோம்.
நாட்டின் வெளியுறவு கொள்கை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. வெளிநாடுகள் தந்த ஆதரவு குறித்தும் கருத்துகள் தெரிவித்தனர்.
உலகில் எந்த ஒரு நாடும் இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை தடுக்கவில்லை. ஐநாவின் 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டும்தான் பாகிஸ்தானை ஆதரித்தன. பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி என அனைத்து நாடுகளுமே இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையையே ஆதரித்தன.
உலக நாடுகளின் ஆதரவு நமக்குக் கிடைத்தன; ஆனால் துரதிருஷ்டவசமாக, நமது ராணுவ வீரர்களின் ஆற்றல், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற முடியாமல் போய்விட்டது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் கருத்து கூற தொடங்கிவிட்டனர்; மோடி எங்கே? 56 இஞ்ச் எங்கே? மோடி தோல்வி அடைந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் கேள்விகளை எழுப்பி கொண்டாடினர்.
அப்பாவி மக்களின் கொலையில் கூட மகிழ்ச்சி அடைந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். தன்னுடைய சுயநல அரசியலுக்காக ,ஆதாயங்களுக்காக என்னை குறிவைத்தனர்; என் மீது சேற்றை வாரி இறைத்தனர்; அவர்களது பொய் முகங்கள், இரட்டை நிலைப்பாடுகள் ஆகியவை ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதாக இருந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காயப்பட்டதாக சொல்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; அதனால்தான் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நீங்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாகலாம்.. உங்களுக்கு மக்களின் இதயத்தில் இடமே இல்லை. இவ்வாறு மோடி பேசினார்.