Operation Sindoor: பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம்- மக்களவையில் மோடி விளக்கம்

Published On:

| By Mathi

Operation Sindoor Modi 2

Operation Sindoor ராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது; எந்த ஒரு நாடும் சொல்லியும் (டொனால் டிரம்ப் பெயரை குறிப்பிடாமல்) நாம் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.

மக்களவையில் Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவத் தாக்குதலை நிறுத்துவதாக நாம் முடிவு செய்தது பற்றி பல கருத்துகள் இந்த அவையில் முன்வைக்கப்பட்டன. சிலர் உண்மைகளை நம்ப மறுக்கின்றனர்; அதுவும் நமது ராணுவம் கூறும் தகவல்களை உண்மைகளை நம்ப மறுக்கின்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் சொல்லும் தவறான தகவல்களை சரி என நம்புகின்றனர்.

ADVERTISEMENT

தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து ஊடுருவி தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். ஒரே இரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பொழுது விடிவதற்குள் நமது வீரர்கள் நமது பகுதிக்கு திரும்பி வந்துவிட்டனர். நாம் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை இலக்கு வைத்தோம்; அதை வெற்றிகரமாகவும் அழித்துவிட்டோம்.

பஹல்காம் தாக்குதலுக்கு எங்கு பயிற்சி வழங்கப்பட்டதோ அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் இதயத்தில் நாம் தாக்குதல் நடத்தினோம்.

ADVERTISEMENT

நமது விமானப் படை 100% இலக்குகளை குறிவைத்து தாக்கியது. நாடு சில விஷயங்களை மறக்காது. ராணுவ நடவடிக்கைகள் குறித்து முதல் நாளில் இருந்தே விளக்கம் அளிக்கப்பட்டது.

நமது ராணுவம், இதுதான் இலக்கு என்பதை பாகிஸ்தானுக்கு சில நிமிடங்களிலேயே உணர்த்திவிட்டது. நாம் நமது இலட்சியத்தை 100% சாதித்தும் விட்டோம்.

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு போதுமான புரிதல் இருந்திருந்தால் வெட்கமே இல்லாமல் தீவிரவாதிகளை அனுப்பி இருக்கமாட்டார்கள். நாம் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம். நமது இலக்குகள், தீவிரவாதத்துக்கு எதிரானது என உலகுக்கு சொன்னோம்.

இந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தான் படைகளுக்கு சரியான பதிலடி தந்தோம். மே 9,10 ஆகிய நாட்களில் நமது ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்கியது. பாகிஸ்தான் கற்பனை கூட செய்ய முடியாத நிலைமையை உருவாக்கியதால் அந்த நாடு மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் தொலைபேசியில் கோரிக்கையை முன்வைத்தது. அதில், ‘நீங்கள் அதிகமாக தாக்குதல் நடத்திவிட்டீர்கள்.. நீங்கள் மோசமாக தாக்கிவிட்டீர்கள்.. இனியும் எங்களால் தாங்கவே முடியாது.. தயவு செய்து இந்த தாக்குதலை நிறுத்துங்கள்” என கேட்டுக் கொண்டது. இதனால்தான் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்தினோம். போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. மே 9-ந் தேதி என்னிடம் அமெரிக்கா துணை அதிபர் பேச முயற்சித்தார்; நான் பேச மறுத்துவிட்டேன். இந்த போரை நிறுத்தும்படி யாரும் நமக்கு கூறவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் இந்த விவாதத்தில் பதிலளிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share