டைரக்ட் செய்த ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அடுத்தடுத்து ஆறு மாதத்தில் ஹீரோ , அப்புறம் தயாரிப்பாளரிடம் இருந்து மொத்தக் காசையும் முதலிலேயே வாங்கி விட்டு லாபத்தை முன்பே ஒதுக்கிக் கொண்டு முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்துத் தரும் படைப்பாளி, அப்புறம் தயாரிப்பாளர், அப்புறம் தியேட்டர் ஓனர், எஸ்டேட் அதிபர், ரியல் எஸ்டேட் ,ஹோட்டல் தொழில்களின் முதலீட்டாளர் என்று பலரும் ராக்கெட் வேகத்தில் போகும் தமிழ் சினிமாவில்.
பதினோரு வருடத்தில் இரண்டே இரண்டு படங்களைக் கொடுத்து, இரண்டும் வெற்றிப் படங்களாக இருந்தும் இன்னும் மூணாவது படம் வெளிவராத நிலையில் இருக்கிறார் ஓர் இயக்குநர் . அதிசயம் ஆனால் உண்மை.
ராம் குமார்.
2014ல் முண்டாசுப்பட்டி என்ற தனது முதல் படத்தை இயக்கினார் ராம்குமார்.
புகைப்படம் எடுத்தால் கூட தப்பு என எண்ணி வாழ்ந்து வரும் ஒரு குக்கிராம மக்களின் முட்டாள்தனத்தையும் அதனோடு வரும் காதலையும் 1980 கள காலத்துப் படமாக நகைச்சுவையாக சொன்ன படம். அதன் நாயகன் விஷ்ணு விஷால். படம் மிகப் பெரிய வெற்றி.
அந்தப் படத்தில் அறிமுகமான முனீஸ் காந்த் ஏராளமான படங்களில் நடித்திருப்பதோடு இப்போது ஹீரோவாகவும் ஆகி விட்டார்.
அடுத்து நான்கு வருடம் கழித்து இவர் இயக்கிய படம் ராட்சசன். 2018 இல் வந்த திரில் படமும் மாபெரும் வெற்றி . அப்போதாவது வேகம் எடுத்தாரா என்றால் அதுவும் இல்லை.
ராட்சஷன் வந்து ஏழு வருடம் ஆகி விட்டது. இன்னும் அடுத்த படம் வெளிவரவில்லை. அதே விஷ்ணு விஷால் நடிக்க இப்போது இரண்டு வானம் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் குமார் .
தனது கேரியரிலேயே நான் அதிக நாள் கால்ஷீட் கொடுத்தது இந்தப் படத்துக்குத்தான் (140 நாட்கள்) என்கிறார் விஷ்ணு விஷால்.
இந்தப் படம் வந்த பிறகாவது ராம்குமார் வேகம் எடுப்பாரா? இல்லை அதற்கு அடுத்த படத்துக்கு , பத்து வருடம் எடுத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை .
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் ; இல்லை என்றால் வாயாலேயே ஊதியாவது காற்று வர வைத்து அந்தக் காற்றிலேயே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று ஓடும் ஆட்கள் உள்ள சினிமாவில் இப்படியும் ஒருவர் .
–ராஜ திருமகன்
