ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்த இளைஞரிடம் ரூ.4.6 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருக்கு தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பகுதி நேர டைப்பிங் வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
இதை உண்மை என நம்பிய மகேஷ்குமார் அந்த நிறுவனத்திற்கு ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த நிறுவனம் மகேஷ் குமாருக்கு 11 மாத காலம் வேலை செய்ய போலியான ஒப்பந்தம் மற்றும் வேலை செய்வதற்கான லிங்க் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து மகேஷ் குமார் தனியார் நிறுவனம் கொடுத்த லிங்கில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்து முடித்தார். வீட்டிலிருந்து டேட்டா டைப்ரைட்டிங் செய்து கொடுக்க இரண்டு பக்கத்திற்கு 300 ரூபாய் தரப்படும் என கூறப்பட்ட நிலையில் 4,000 பக்கம் அடித்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காததால் மகேஷ் குமார் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்நிறுவனம் சார்பில் சிலர் மிரட்டி உள்ளனர். இதனைக் கேட்டு ஷாக் ஆன மகேஷ் குமாரை மிரட்டி ரூ.4,68,127 பணத்தை அபகரித்தனர்.
இதுதொடர்பாக மகேஷ் குமார் சைபர்கிரைமில் ஆன்லைன் வழியாக புகார் அளித்தார். அதனை ஏற்று, இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி துணை ஆய்வாளர் சுதாகர், தலைமை காவலர் அருண்குமார், காவலர்கள் சதீஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு அமைத்து பல்வேறு இணையவழி யுக்திகளை கையாண்டதில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது.
அதனையடுத்து மகேஷ்குமாரிடம் மிரட்டி பணம் பறித்த சிவப்பா, போபடோ ஆகியோரை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் வங்கி கணக்கிற்கு கடந்த 5 நாட்களில் 1 கோடியே 50 லட்சம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
கைதானவர்கள் இருவரையும் புதுவை தலைமையியல் குற்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவர்களை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிறுவனத்தை நடத்தி வந்த 3 பேர் துபாயில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த ஆன்லைன் மோசடி குறித்து இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், “நாளுக்கு நாள் புதிய புதிய முறையில் இணைய வழி மோசடிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றது இணைய வழியை நம்பி வருகின்ற வேலை வாய்ப்பு, டிஜிட்டல் அரஸ்ட், வீட்டில் இருந்தே வேலை, பங்குச் சந்தையில் முதலீடு, குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம் போன்ற எதையுமே நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.