அட்டப்பாடி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே மஞ்சுக்கண்டு பகுதியில் வசித்து வந்தவர் சாந்தகுமார் (52). இவர் இன்று (அக்டோபர்7) காலை தாவளம் முள்ளி ரோடு வழியாக சென்றபோது திடீரென காட்டு யானை தாக்கியது. இதில் சாந்தகுமார் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால், பல நாட்களாக அந்தப் பகுதியில் யானைகள் சுற்றித் திரிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உள்ளூர் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து தாவளம் பகுதியில் பெருமளவிலான பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து பல மணி நேரமாக பாதிக்கப்பட்டது.
காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சமரசம் செய்தும், மக்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். “பாலக்காடு கலெக்டர் நேரில் வந்து பேசியே தீர வேண்டும்” என்ற கோரிக்கையுடன் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.