ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது.
மக்களவை தேர்தலையும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையிலும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் வகையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அரசு முன்மொழிந்தது.
இதற்கு தமிழகம் உட்பட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்த முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 12, 2024 அன்று ஒப்புதல் வழங்கியது.
தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்டு வருகிறது.
2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
