கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகிற படங்கள் பெரும் கவனத்தைப் பெற்றன. அப்படி ‘ஆஹா’ தளத்தில் வெளியான தெலுங்கு படைப்புகளில் ஒன்று ‘கலர் போட்டோ’. தற்போது ‘மண்டாடி’யில் சூரி உடன் கைகோர்த்திருக்கிற சுஹாஸ், அந்த படத்தின் வழியே தனக்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார். அதில் சாந்தினி சௌத்ரி, சுனில் உட்படப் பலர் நடித்திருந்தனர்.
அதனை இயக்கிய சந்தீப் ராஜ், தற்போது ‘மௌக்லி 2025’ எனும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு நட்சத்திர ஜோடியான ராஜிவ் கனகலா – சுமாவின் மகன் ரோஷன் கனகலா இதில் நாயகனாக நடிக்கிறார். சாக்ஷி மடோல்கர் இதில் நாயகியாக நடிக்கிறார்.
இதன் ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோ சமீபத்தில் வெளியானது.
இதில் வில்லனாகத் தலைகாட்டியிருப்பவர் பண்டி சரோஜ்குமார். பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் வில்லத்தனத்தை வெளிக்காட்டியிருக்கும் இவர், தமிழில் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், தமிழில் ‘போர்க்களம்’, ‘அஸ்தமனம்’ ஆகிய படங்களை இவர் தந்திருக்கிறார். இரண்டுமே ‘ஆக்ஷன்’ பட ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டவை.
இன்றும் ’அந்த படங்கள் சூப்பராக இருக்கும்’ என்று சொல்கிற அரிதான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்போது இருபதுகளில் இருந்த பண்டி சரோஜ்குமார், நடுத்தர வயதை எட்டியபிறகு தனது இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டியிருக்கிறார். மேற்சொன்ன இரு படங்களையும் நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, இது ஒரு இனிப்பான செய்தி தான்..!