தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு 10-வது நாளாக இன்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
2021 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய அகில இந்திய சுற்றுலா அனுமதி (All India Tourist Permit – AITP) விதிமுறைகளின் கீழ் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அகில இந்திய அனுமதி பெற்றிருந்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அதிக சாலை வரிகளை விதித்து அபராதம் விதிக்கின்றனர் என்பது ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு சாலை வரி ₹1.5 லட்சம், AITP வரி ₹90,000, கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமார் ₹2 லட்சம் என வரிச்சுமை மற்றும் அதிக அபராதங்களால் பேருந்துகளை இயக்க முடியாது என உரிமையாளர்கள் அறிவித்தனர்.
கேரளாவில் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகளுக்கு ₹70 லட்சம் வரையும், கர்நாடகாவில் 60க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு ₹1.15 கோடி வரையும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் 600-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நவம்பர் 7-ந் தேதி முதல் இயக்கப்படவில்லை. இந்த மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள், ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி பயணிக்கின்றனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் ரூ20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. அன்பழகன், நவம்பர் 10-ந் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரையும், நவம்பர் 11-ந்தேதி போக்குவரத்து ஆணையரையும் சந்தித்துப் பேசினார். அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக அவர்கள் உறுதி அளித்த போதிலும், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை, இதனால் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பேச்சுவார்த்தைகள் நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
