தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று (அக்டோபர் 18) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரண்முறைப்படுத்துவது, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நவம்பர் 18) மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று பணிக்கு வரவில்லை என்றால் அங்கீகரிக்கப்படாத விடுமுறையாக கருதி சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கையையும் மீறி இன்று (நவம்பர் 18) அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்.
எழிலகத்தில் இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“போராடுவோம்… போராடுவோம்… வெற்றி கிட்டும் வரை போராடுவோம்” என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த போராட்டத்தால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை வரும்” என்று கூறியுள்ளார்.
கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், நாமக்கலில் ஆட்சியர் அலுவலகம் அருகேவும், புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வருகின்றன.
அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் டிசம்பர் முதல் வாரத்திலிருந்து காலவரையறை அற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
