ADVERTISEMENT

பழைய பென்சன் திட்டம் : இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

Published On:

| By Kavi

பழைய பென்சன் திட்டம் தொடர்பாக ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான குழு அரசிடம் இடைக்கால அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியரியர்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும். பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு. நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை கடந்த பிப்ரவரி மாத தமிழக அரசு அமைத்தது.

இந்நிலையில் இக்குழு அரசு ஊழியர்கள் சங்கங்களை தலைமை செயலகத்துக்கு அழைத்து பேசியது. இக்குழுவுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை இக்குழு நடத்தியுள்ளது.

மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.

ADVERTISEMENT

கடந்த எட்டு மாதங்களில், 7.36 இலட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 இலட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது.

கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.

சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஒன்றிய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இச்சூழ்நிலையில், இக்குழுவானது இன்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share