பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பான அலுவலர் குழு அழைப்பை புறக்கணிப்போம் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என மூன்று திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டம் பொருத்தமானது என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அலுவலர் குழுவை 04.02.2025 அன்று திமுக அரசு அறிவித்தது.
இக்குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தமிழக நிதி அமைச்சகத்தின் பென்ஷன் கமிட்டி கடந்த 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது, வரும் 18 , 25 ஆகிய இரு தேதிகளிலும் , செப்டம்பர் 1 , 8 ஆகிய இரு தேதிகளிலும் அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் இந்த குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இதற்காக இந்த தேதிகளில் தலைமை செயலகத்தில் 10 ஆவது மாடியில் உள்ள நாமக்கல் கவிஞர் அரங்கத்துக்கு வருமாறு அரசு ஊழியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது.
இந்தசூழலில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரடெரிக் எங்கெல்ஸ், செல்வக்குமார் இன்று (ஆகஸ்ட் 15) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“ அலுவலர் குழு முதலில் ஒன்பது மாதங்களில் குழு அறிக்கை வழங்கும் என்று அறிவித்து விட்டு, அதனால் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பின்னர் எட்டு மாதங்களில் குழு அறிக்கை வழங்கும் என்று அறிவித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண்: 309 க்கு மாறாக அலுவலர் குழுவை திமுக அரசு அமைத்தது.
அலுவலர் குழு மூலம் காலம் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ஆறு மாதங்கள் வரை அலுவலர் குழு செயல்படாமல், எந்த சங்கத்தையும் சந்திக்காமல் இருந்தது.
7 வது மாதத்தில் அலுவலர் குழு சங்கங்களின் கருத்து கேட்கும் நாடகத்தை துவங்கியுள்ளது.
ஒரு கூட்டத்திற்கு 40 சங்கங்கள் என்ற அடிப்படிடையில் வாரத்திற்கு ஒரு நாள் வீதம் 4 கட்ட கூட்டத்திற்கு 164 சங்கங்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், போராடும் சங்கங்கள், பொதுத் துறை நிறுவன சங்கங்கள்,
அரசு ஆதரவுபெற்ற சங்கங்கள் என்று 300 க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு திட்டமிட்டே அலுவலர் குழு அழைப்புக் கொடுக்கவில்லை.
இதனால் அழைப்பு கிடைக்காத சங்கங்களுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கப்படும்
அழைப்பு கிடைக்காத சங்கங்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க தங்கள் சங்கத்தை அழைக்க வேண்டும் என்று அலுவலர் குழுவிடம் கோரிக்கை முன்வைப்பது தவிர்க்க இயலாதது.
சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி வரை அலுவலர் குழுவை நீட்டிக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

அலுவலர் குழு அறிக்கை சமர்பிக்கும் வரை போராட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்காக பலர் கோரிக்கை வைத்து போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்வார்கள்.
அலுவலர் குழு தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து தொடர்பு கொண்ட உயர் அலுவலர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனை முற்றிலும் தமிழக அரசிடம் இல்லை.
எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம் தவிர்த்து மாற்று ஆலோசனைகளை குழுவிடம் வழங்குங்கள் என்று தெரிவித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக எந்தத் திட்டத்தையும் ஒட்டு மொத்த தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்கங்களின் மேல் பழிபோட்டு அலுவலர் குழுவின் காலத்தை நீட்டிக்கச் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை முறியடிக்கவும்,
பழைய ஓய்வூதியத் திட்டம் தவிர வேறு எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்பதையும் தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும் விதமாக அலுவலர் குழுவை சந்திப்பதை அனைத்து சங்கங்களும் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.
ராஜஸ்தான், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தியது போன்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த தமிழக அரசுக்கு தொடர் போராட்டங்கள் மூலம் நிர்பந்தம் கொடுத்து, பழைய ஓய்வுதியத் திட்டத்தை வென்றெடுப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
