’நீ வாராய்’ எனும் அளவுக்கு வசீகரிக்கிறதா?
‘ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி’ என்ற ‘தேனிலவு’ படப் பாடலை ஏ.எம்.ராஜாவின் இசையில் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல் இணையிடம் துள்ளலை வெளிப்படுத்த, எந்த தலைமுறைக்கும் உதவி செய்யக்கூடியது அந்தப் பாடல். அந்த அளவுக்கு இளமை கொப்பளிக்கிற படைப்பாக அது திகழ்கிறது. அந்த பாடலின் முதல் வரியை ஒரு திரைப்படத்தின் டைட்டில் ஆக இட வேண்டுமானால், அதன் உள்ளடக்கத்தில் எந்த அளவுக்கு இளமை துள்ள வேண்டும்? oho enthan baby movie review
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையமைப்பில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ அப்படியொரு ‘இளமைத் துள்ளலை’த் திரையில் தருகிறதா?

ஒரு கதை கேட்போமா..!
தாய், தந்தை இருவரும் சண்டையிடுவதைச் சிறு வயது முதலே பார்த்து வளர்கிறார் அஸ்வின் (ருத்ரா). அந்த வயதில், பெற்றோரின் மோதலை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் கைக்குக் கிடைக்கும் பொருட்களை உடைத்து நொறுக்குவதால், அவர்களது சண்டை நிற்பதைக் காண்கிறார். அதுவே, அவரிடத்தில் ஆத்திரமும் ஆவேசமும் குடிகொள்ளக் காரணமாகிறது. ஒரு மெல்லிய கோட்டைத் தாண்டினால், எவராலும் நாயகனின் கோபத்திற்கு ஆளாகிவிட முடியும் என்கிற நிலை உருவாகிறது.
இப்படியொரு மனிதரை எந்தப் பெண் காதலிப்பார்? ஆனால், அஸ்வின் வாழ்வில் அது நிகழ்கிறது.
தனது தோழி அஞ்சலியின் உறவினரான மீராவின் (மிதிலா பால்கர்) அறிமுகம் கிடைக்கிறது. வயதில் மூத்தவரான அவரிடம் காதலை உணர்கிறார் அஸ்வின். மெல்ல இருவரும் காதலைப் பகிர்கின்றனர். எவ்விதப் பிரச்சனைகளும் இல்லாமல் இருவரும் வாழ்க்கை பயணத்தைத் தொடர்கின்றனர். அப்படித்தான் அஸ்வின் எண்ணுகிறார். அவருக்காகப் பல விஷயங்களை மீரா பொறுத்துப் போகிறார் என்பதையோ, மனதில் பொங்கும் கோபத்தையும் வருத்தத்தையும் மூடி மறைக்கிறார் என்பதையோ உணராமல் போகிறார்.
ஒருநாள் அது இருவரது காதலுக்கும் இடையே தலை நீட்டுகிறது. அன்றைய தினம் இருவரது பிரிகின்றனர்.
உதவி இயக்குனராக இருந்து வரும் அஸ்வின், இந்த உண்மைக்கதையைத் திரைப்படமாக எடுக்கும் நோக்கில் நாயகன் விஷ்ணு விஷாலிடம் சொல்கிறார். அவருக்குக் கதை பிடித்துப் போகிறது. ‘மீதியை சொல்லுங்க’ என்று அவர் கேட்க, ‘அதுக்கப்புறம் மீராவைப் பார்க்கவே இல்ல’ என்கிறார் அஸ்வின்.
’அப்படின்னா மீராவை மீட் பண்ணுங்க. உங்களோட மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை சரி செய்யுங்க. அடுத்த பாதியை தயார் பண்ணிட்டு வாங்க’ என்று அனுப்பி வைக்கிறார் விஷ்ணு விஷால்.
ஆனால், அதனைச் செய்யவிடாமல் அஸ்வினைத் தடுக்கிறது ‘ஈகோ’. அதனை அவரால் எதிர்கொள்ள முடிந்ததா, தன்னிடம் உள்ள குறைகளை உணர முடிந்ததா என்று சொல்கிறது ஓஹோ எந்தன் பேபி’யின் மீதி.

வசீகரிக்காத உள்ளடக்கம்!
மேற்சொன்ன கதையில் இருந்து, சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு நல்லதொரு உள்ளடக்கம் இதில் இருக்கும் என்று எதிர்பார்ப்பு கொள்ள முடியும். சட்டென்று வசீகரிக்கிற காட்சியாக்கம் இதிலிருக்கும் என்று நம்பலாம்.
’ஓஹோ எந்தன் பேபி’யின் திரைக்கதையும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. உதவி இயக்குனரான நாயகன் கதை சொல்வதாகத் தொடங்குகிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் காட்சிகள் கதை சொல்லலில் ‘அவசரத்தனம்’ மேலோங்குவதாகத் தெரிய, மெல்ல அந்த வசீகரிப்பு மங்குகிறது.
நாயகன் நாயகியின் காதலை நம்முடையதாக எண்ணவிடாமல் தடுக்கும் அளவுக்கு அந்த சித்தரிப்பு இருப்பது இப்படத்தின் பலவீனம்.
முகேஷ் மஞ்சுநாத் இதன் கதையை எழுதியிருப்பதோடு சாரதா என்பவருடன் சேர்ந்து திரைக்கதையை ஆக்கியிருக்கிறார். காட்சிகளில் மேற்கத்திய ‘ரொமான்ஸ்’ படங்களின் வாசம் நிறையவே தெரிகிறது. ஒரு ‘ஸ்டைலிஷான’ ரொமான்ஸ் காமெடி ட்ராமாவை தர மெனக்கெட்டிருப்பதும் புரிகிறது.
சதா சர்வகாலமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோரைக் கண்டதால், தனது துணை ஒரு நொடி கூடத் தன்னோடு சண்டையிடக் கூடாது என்பது நாயகனின் எதிர்பார்ப்பு.
சொத்துக்காகத் தன்னையும் தாயையும் அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கும் ஆத்திரமிக்க உறவினரின் பிடியில் இருந்து விடுபடுகிற வகையில், அதற்கு நேரெதிரான ஒரு துணை வேண்டுமென்பது நாயகியின் ஆசை.
இரண்டுமே ஒன்றோடொன்று முட்டிக்கொள்வதைக் காட்டுகிற திரைக்கதையில், அதற்குக் காரணமான பாத்திரங்கள் பற்றிய விளக்கம் போதுமான அளவுக்குத் தரப்படவில்லை.
‘ஓஹோ எந்தன் பேபி’யின் மிக முக்கியப் பலவீனமாக அதுவே இருக்கிறது. மிகச்சிறப்பான காட்சியாக்கத்தைக் கொண்டிருந்தும், ரசிகர்கள் பொருட்படுத்தாமல் போவதற்கான காரணமாகவும் அதுவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், கலை இயக்குனர் ராஜேஷ், படத்தொகுப்பாளர் பிரணவ் மட்டுமல்லாமல் படத்தோடு சம்பந்தப்பட்ட அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பான ஒத்துழைப்பை இயக்குனருக்குத் தந்துள்ளனர்.
குறிப்பாக, இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் தந்திருக்கும் பாடல்களும் பின்னணி இசையும் திரையோடு நம்மைப் பொருந்தச் செய்கிற விதமாக இருக்கின்றன. அது ‘எக்சலண்ட்’ ஆக இருக்கிறதா என்ற கேள்விக்குத்தான் நம்மால் பதில் சொல்ல இயலவில்லை.

ருத்ரா, இதில் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் ட்ராமா நிறைந்த ஒரு கதையை அவருக்குத் தேர்ந்தெடுத்து தந்திருக்கிறார் அவரது உறவினரான விஷ்ணு விஷால். அதற்குப் பொருத்தமான நடிப்பைத் தருவதில் இன்னும் நிறைய தொலைவு பயணிக்க வேண்டும் என்பதாக அமைந்துள்ளது ருத்ராவின் திரை இருப்பு.
ஏற்கனவே இந்தி, தெலுங்கு படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், ‘பில்டர் காபி’ யூடியூப் சேனல் வீடியோக்கள் வழியே வசீகரித்தவர் நாயகி மிதிலா பால்கர். அவரது இன்றைய தோற்றத்திற்கேற்ப இப்படத்தில் அவரது பாத்திர வார்ப்பு அமைந்துள்ளது. அவரது நடிப்பு நம்மை வசீகரிக்கிறது.
இந்த படத்தில் நாயகன் விஷ்ணு விஷாலும் இயக்குனர் மிஷ்கினும் திரையில் ‘அவர்களாகவே’ வந்து போயிருக்கின்றனர். தங்களது குணாதிசயங்களை, சொந்த வாழ்வில் நிகழ்ந்த சிலவற்றைப் பகிர்ந்திருக்கின்றனர். அவற்றில் சில விஷயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடியவை.
விஷ்ணு விஷாலின் உதவியாளராக வரும் ரெடின் கிங்ஸ்லி, நாயகனின் சித்தப்பாவாக வரும் கருணாகரன் இருவரும் ஆங்காங்கே நகைச்சுவையை உதிர்த்திருக்கின்றனர்.
ஏற்கனவே சொன்னது போல, நாயகனின் பெற்றோராக வரும் விஜயசாரதி, கஸ்தூரி, நாயகியின் தாயாக வரும் கீதா கைலாசம், உறவினராக வரும் அஜித் கோஷி உள்ளிட்டோருக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை.
பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, அஞ்சு குரியன் உள்ளிட்டோருக்கும் அதே கதிதான்.
நாயகனின் தோழமையாக வருகிற நிர்மல், நிவாஷினி இருவருமே நம் கவனம் ஈர்க்கின்றனர்.
குறிப்பாக, நாயகனின் ‘டீன் ஏஜ் க்ரஷ்’ ஆக வருகிற வைபவி தாந்த்லே திரையில் சில நிமிடங்களே வந்துபோனாலும் ‘செக்ஸி’ தாண்டவம் ஆடியிருக்கிறார். பார்பி பொம்மை போல முகம், வாளிப்பான உடல்வாகு, வசீகரிக்கிற கண்கள், அசத்துகிற நடிப்பு என்று அவர் வருகிற காட்சிகள் ஒரு ‘ஷோரீல்’ போன்றே இருக்கின்றன.
‘தேனிலவு’ படத்தின் ஒரு பாடல் வரியை டைட்டிலாக வைத்த இப்படக்குழு, அதனை ஏதாவது ஒரு காட்சியில் பயன்படுத்தியிருக்கலாம். அது நிகழாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமாருக்கு இது முதல் படைப்பு. இதற்கு முன்னர் ஒரு நடிகராக, அவர் நம்மை வசீகரித்திருக்கிறார். அவர் இயக்கிய விளம்பரப் படங்கள் ஈர்த்திருக்கின்றன.
இரண்டையும் ஒன்றாகக் குழைத்தாற்போல, அவரது ’அறிமுகப்படம்’ இருந்திருக்க வேண்டும். அதற்கேற்ற ஒருங்கிணைப்பையும் உழைப்பையும் இப்படத்தில் கொட்டியிருக்கிறார். ஆனாலும், ’ஓஹோ எந்தன் பேபி’ அவ்வாறு அமையவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம்.
எண்பதுகள், தொண்ணூறுகளில் தமிழில் வெளியான சில ‘ரொமான்ஸ்’ படங்களில் கதையின் மைய இழை அடிக்கோடிட்டுச் சொல்லப்பட்டிருக்கும். அதற்குத் தேவையானவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். அது ரசிகர்களை எளிதாகப் படத்தோடு பிணைக்கும். அந்த அணுகுமுறையை இயக்குனர் கைக்கொண்டிருக்கும் பட்சத்தில், ’ஓஹோ எந்தன் பேபி’யில் இளமை இன்னும் அதிகமாகத் துள்ளியிருக்கும்.. ‘நீ வாராய் எந்தன் பேபி’ என்று ரசிகர்கள் கொண்டாடும்படியாக மாறியிருக்கும்..!