துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரிகள் யார்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published On:

| By Mathi

Vice Presidential Election

நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (Vice Presidential Election 2025) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலானது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 மற்றும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதிகள், 1974 ஆகியவற்றின் கீழ் நடத்தப்படுகின்றது.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 பிரிவு 3ன் கீழ் தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து புதுதில்லி அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கின்றது. மேலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவித் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்துக் கொள்ளலாம். மரபுப்படி மக்களவை பொதுச்செயலாளர் அல்லது மாநிலங்களவை பொதுச்செயலாளர் சுழற்சி முறையில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

கடந்த குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் மக்களவை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

ADVERTISEMENT

ஆகவே, தேர்தல் ஆணையம் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தோடு கலந்தாலோசித்து மாநிலங்களவையின் துணைத்தலைவர் ஒப்புதலுடன் மாநிலங்களவை பொதுச்செயலாளரை குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் 2025க்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் மாநிலங்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் திருமதி கரிமா ஜெயின் மற்றும் மாநிலங்களவை செயலகத்தின் இயக்குனர் திரு விஜய்குமார் ஆகியோரை குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் 2025-க்காக தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகளாக நியமித்து உள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிக்கை இன்று தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share