2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன என்பது தெளிவாகவில்லை. இந்த நிலையில் போடியில் நேற்று பிப்ரவரி 24-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.
போடியில் ஒரு மணிநேரம் செய்தியாளர்களிடம் கடந்த கால சம்பவங்களை மனம்விட்டு பகிரங்கமாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஓபிஎஸ் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்
2001-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சோதனை வந்தபொழுது அவர் என்னை முதலமைச்சராகப் பொறுப்பில் நியமித்தார்கள். ஆறு மாத காலம் நான் ஜெயலலிதா என்ன கட்டளையிட்டார்களோ அந்தக் கட்டளைப்படி தமிழகத்2001-ல் முதல்வரான போது..
2001-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சோதனை வந்தபொழுது அவர் என்னை முதலமைச்சராகப் பொறுப்பில் நியமித்தார்கள். ஆறு மாத காலம் நான் ஜெயலலிதா என்ன கட்டளையிட்டார்களோ அந்தக் கட்டளைப்படி தமிழகத்தினுடைய முதலமைச்சராக நான் பொறுப்பேற்று அடிபிறழாமல் என்னுடைய பணியைக் கடமையை ஆற்றினேன் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஜெயலலிதா மீண்டும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மகிழ்ச்சியோடு என்னுடைய முதலமைச்சர் பதவியை ஜெயலலிதாவின் திருக்கரங்களில் ஒப்படைத்தேன் என்பதுதான் வரலாறு.
2011-ல் 2-வது முறை முதல்வரானது…
2006-க்குப் பின் 2011-ல் மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருக்க முடியாத ஒரு சூழல். பெங்களூரு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடுத்து அடுத்த வினாடியே என்னை அழைத்து, நீங்களெல்லாம் சென்று சட்டமன்ற உறுப்பினர்களுடைய கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டார்.
விஸ்வநாதனை ஜெயலலிதா கூப்பிட்டு, பன்னீர்செல்வமே எழுந்திருச்சு ஜெயலலிதா என்னை முதலமைச்சராக சொன்னார் என்று சொல்லாமல் நீங்களே எழுந்திருச்சு பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் என்று சொல்லுங்கள் என உத்தரவிட்டார். நானும் 2-வது முறையாக ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
2016-ல் மீண்டும் தேர்தல், சட்டமன்ற பொதுத் தேர்தல். அந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறுவதற்கு தன் உடல்நிலையைப் பாராமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மீண்டும் முதல்வரானார்.
ஜெ. மறைவின் போது நடந்தது என்ன?
ஜெயலலிதா மறைந்த போது உடனே, என்னை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று சில பேர் அணுகி ஒரு கருத்தைச் சொன்னார்கள். நான் மறுத்தேன். முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு மறுத்தேன். ஏன் என்று கேட்டால் ஜெயலலிதா, உயிரோடு இருந்த நேரத்தில் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு அவர் இட்ட கட்டளையை ஏற்று நான் நிறைவாக என்னுடைய பணியை முடித்திருக்கிறேன் என்ற மனநிம்மதி எனக்கு இருக்கிறது, மன மகிழ்ச்சி இருக்கிறது.
ஜெயலலிதா இல்லாத நேரத்தில் நான் முதலமைச்சராக வருவதற்கு விரும்பவில்லை என்று சொன்னேன். என்னை கட்டாயப்படுத்தி தான் அந்த முதலமைச்சர் பதவியை ஒப்புக்கொள்ள வைத்தார்கள் என்பது தான் வரலாறு.
நான் 3-வது முறையாக முதலமைச்சராக கட்டாயத்தின் அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
ஜல்லிக்கட்டுப் போராட்டமும் மோடியும்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் போராட்டங்கள் நடந்தன.
சென்னை மெரினா கடற்கரை சாலைகளில் 10 நாட்கள் உட்கார்ந்து கொண்டு அறப்போராட்டத்தில் அனைவரும் ஈடுபட்டனர்.
நான் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘சந்திக்க வேண்டும்’ என்று சொன்னேன்.. அவர் என்னை வரும்படி அழைத்தார்.
நான் சசிகலாவிடம் சொல்லிவிட்டுத்தான் டெல்லி சென்றேன். அங்கே அறையில் தங்கியிருந்தபோது தம்பிதுரையும் அங்கே இருக்கின்ற அதிகாரிகளும் என்னைச் சந்தித்தார்கள்.
மோடி, ஜல்லிக்கட்டு பிரச்சினை பற்றி 25 நிமிடம் நான் பேசுவதைக் கேட்டு உடனடியாக மத்திய அரசினுடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய அரசாணை உடனடியாகப் போடும்படி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவைப் பெற்றுக்கொண்டு நான் சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி ஒரு ஆர்டினன்ஸ் (Ordinance) போட்டுத் திரும்பவும் அதை கவர்னருக்கு இங்கே அனுப்பி வைத்தேன். ஜனாதிபதி இவர்கள் எல்லாம் ஒப்புதல் பெற்று இந்த ஜல்லிக்கட்டை வெற்றிகரமாக நடத்தினோம்.
இது ஒரு வரலாறாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு நல்ல பெயர் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.
2017-ல் பதவி பறிப்பின் போது நடந்தது என்ன?
ஜெயலலிதா வீட்டுக்கு உங்களை அழைக்கிறார்கள் என்ற தகவல் வந்தது, உடனடியாக அங்கே சென்றேன். அதே நேரத்தில் அதிமுக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற தகவலும் கிடைத்தது. சட்டமன்ற கட்சியினுடைய தலைவர்தான் நான், அதனால்தான் நான் முதல்வர்..எனக்கே தெரியாமல் எப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று எண்ணி நினைத்துக் கொண்டேன்.
ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றேன். அங்கே எல்லோரும் இருந்தார்கள். அது உங்களுக்கெல்லாம் தெரியும், அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை நான் பல கூட்டங்களில் பல நேரங்களில் உங்களுக்குப் பகிர்ந்திருக்கிறேன்.
அவர்கள் சொன்னபடியே நான் என்னுடைய பதவியை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டேன்
ஜெ. நினைவிடத்தில் தர்மயுத்தம்
அப்போது, சென்னையை காலி செய்துவிட்டு நான் ஊருக்குச் சென்று விடலாம் என்று நினைத்தேன். அன்று இரவு ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்துக்கு போய் வணங்கிவிட்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். அன்று வீட்டில் படுக்கும் போது காலை 3 மணி. ஆனால் அதிகாலையிலேயே பெரும் கூட்டம் கூடிவிட்டது. 10 நாட்களாக இதே நிலைமைதான். “நீங்கள் ஊருக்குச் செல்லக்கூடாது” என்று என்னைத் தடுத்து தொண்டர்கள் அனைவரும் என் வீட்டின் முன்னால் உட்கார்ந்துட்டாங்க. இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் 10 நாள் வந்து போயிட்டே இருந்தது.
தர்மயுத்தத்தின் போது நடந்தது என்ன?
தர்மயுத்தம் நடத்திய போது கொங்கு மண்டலத்தில் பெரும் கூட்டம். பெரிய கூட்டம், கொங்கு மண்டலத்தில் இந்த அமைச்சர்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். அதனால் காலை 6 மணிக்கு என்னுடைய மகள் வீட்டிற்கு வேலுமணியும் தங்கமணியும் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘அண்ணனைப் பார்க்க வேண்டும்’ என்று தகவல் வருது.
நான் உடனடியாக என் மகள் வீட்டிற்குச் சென்றேன்.. அங்கே 2 பேரும் இருந்தார்கள். ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘கட்சியை இணைக்க வேண்டும்’ என்றார்கள்.
நான் உடனே ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். அதற்குண்டான வேலை எல்லாம் நடைபெற்றது.
முதற்கட்டமாக என்ன பேசினார்கள் என்று சொன்னால், எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார், அவர் தொடரட்டும் என்று சொன்னார்கள். சரி அதுதான் நியாயம் என்று நானும் ‘சரி’ என்று சொல்லிவிட்டேன்.
கட்சியை நீங்கள் நடத்துங்கள், பொதுச்செயலாளராக நீங்கள் கட்சியை வழிநடத்துங்கள் என்றனர்.
அதிமுகவில் இரட்டைத் தலைமை எப்படி உருவானது?
2021 தேர்தலின் போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. “இரட்டைப் பதவி என்று நம்முடைய கழகத்திலே இருக்கிறது. அதை ஒற்றைப் பதவியாகக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு புதிய பிரச்சனையை கிளப்பினார்கள். இந்த இரட்டை தலைமைப் பதவியைக் கொண்டு வந்ததே திரு. எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முதலில் ‘பொதுச்செயலாளராக நீங்களே செயல்படுங்கள்’ என்று சொல்லிவிட்டு, அதற்குப் பின்னாலே ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி உருவாக்கப்பட வேண்டும்’ என்று அவர் தரப்பிலிருந்து வந்து, ‘முதலமைச்சராக இருப்பவர் கட்சிப் பதவியிலும் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, ‘நீங்கள் என்னை ஒருங்கிணைப்பாளர் என்க, அவர் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கட்டும்’ என்று சொன்னார்கள். சரி என்று நானும் அதற்குச் சம்மதித்தேன்.
காலையில் இதைச் சொன்னவர்கள், அன்றைக்கு இரவே ஒரு புதுப் பிரச்சனையை கிளப்பினார்கள். அதாவது, ‘ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் தலைமை கழகத்தில் கட்சி சார்பாக எந்த உத்தரவு வந்தாலும் இரண்டு பேரும் கையெழுத்துப் போட வேண்டும்’ என்று சொன்னார்கள். உலகத்தில் எந்தக் கட்சியிலும் இப்படி இருக்காது. எப்படி ரெண்டு பேரும் கையெழுத்துப் போட்டு ஒரு நடவடிக்கையை எடுக்க முடியும் என்று நான் எவ்வளவோ சொன்னேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கட்சி ஒன்று சேர வேண்டும் என்று எல்லாத் தொண்டர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள், நான் இதிலிருந்து பின்வாங்கினாலோ அல்லது மறுத்தாலோ பெரிய பிரச்சனை வரும், மீண்டும் கட்சி பிளவுபடும் சூழல் உருவாகக் கூடாது என்பதால் அதற்கும் நான் ‘சரி’ என்றேன்.
முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்
அதே நிலையைத்தான் நான் ஒரு நான்கு வருஷம் பொறுத்துக் கொண்டிருந்தேன். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பொறுத்துக் கொண்டேன். அப்புறம் தேர்தலுக்கு ஒரு வருஷம் இருக்கும்போது, ‘இப்பவே முதலமைச்சர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்’ என்று ஒரு குழுவாகக் கூடிப் பேசினார்கள்.
ஒரு வருஷம் இருக்கும்போது எதுக்கு இப்பவே இந்தப் பிரச்சனையை கொண்டு வர்றீங்க? முன்னாடியே யாரைச் சொன்னாலும் – அவரைச் சொன்னாலும் சரி, என்னைச் சொன்னாலும் சரி – ‘கேரக்டர் அசாசினேஷன்’ (Character Assassination) நடக்கும், குணம் சார்ந்த விமர்சனங்கள் வரும், அதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன்.
ஏனென்றால், நமக்கு ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது. 1980-ல் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸும் திமுக-வும் கூட்டணி வைத்தார்கள். தலைவர் (எம்.ஜி.ஆர்) அண்ணா திமுக-வில் தேர்தல் நிக்கிறார். காங்கிரஸ் மற்றும் திமுக ஆளுக்கு 112, 112 என 224 இடங்களைப் பிரித்துக்கொண்டார்கள். அப்போது தலைவர் ஒரு கேள்வி கேட்டார்: ‘ரொம்ப சந்தோஷம், நீங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து இருக்கீங்க, உங்களுக்கு என் வாழ்த்துகள். ஆனா யார் முதலமைச்சர்? காங்கிரஸா இல்ல திமுக-வா?’ என்று கேட்டார்.
அப்போதுதான் அங்கே பிரச்சனை ஆரம்பித்து, மனவருத்தங்கள் வந்து, அங்கே நாலு பேர் பேச, இங்கே நாலு பேர் பேச கடைசியில் தலைவர் எழுந்து சுற்றுப்பயணம் போனார். 77-ல் ஆட்சியில் இருந்த தலைவரை டிஸ்மிஸ் செய்த காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்ததை மக்கள் விரும்பவில்லை. மக்கள் மீண்டும் தலைவருக்கே (எம்.ஜி.ஆர்) ஆதரவு கொடுத்து இரண்டாம் முறையாக அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். இதுதான் வரலாறு.
அந்த வரலாறு நம் கழகத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, ‘நீங்களே முதலமைச்சராக இருந்துவிட்டுப் போங்கள், எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று சொன்னேன். ஆனால் அதை அவர்கள் கேட்காமல் அறிவிக்கச் சொன்னார்கள். நானே வெளியே வந்து அவரே (இ.பி.எஸ்) வேட்பாளர் என்று அறிவித்தேன். இதற்கு மேல் யாரும் ஒத்துழைப்பு கொடுக்க முடியாது.
2022 அதிமுக பொதுக்குழு களேபரம்
அப்புறம் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று முடிவானது. தீர்மானங்கள் நிறைவேற்ற நானும் எடப்பாடி பழனிசாமியும் உட்கார்ந்து 23 தீர்மானங்களை ரெடி பண்ணி, இரண்டு பேரும் கையெழுத்துப் போட்டோம்.
பொதுக்குழு அன்று காலை 7 மணிக்கே எடப்பாடி பழனிசாமி கிளம்பிவிட்டார். 10 மணிக்குத்தான் பொதுக்குழு, இப்போதே ஏன் வண்டி போகிறது என்று யோசித்தபடி நானும் கிளம்பினேன்.
நான் போகும்போது ஒரு ஒரு இடத்திலும் என்னை நிறுத்தி நிறுத்திப் போகச் சொன்னார்கள். கடைசியில் அண்ணா நகர் ஆர்ச் கிட்ட அவர் (இ.பி.எஸ்) ஒரு பெரிய கூட்டத்தைப் போட்டுப் பேசிக்கொண்டு இருக்கிறார். நான் அவரோட பேச்சு கேட்கிற தூரத்திலே, ஒரு ஒரு கிலோமீட்டர் தள்ளி நிற்கிறேன். 45-லிருந்து 50 நிமிடம் அங்கேயே நிற்க வேண்டிய சூழல்.
அப்போது என் ஏ.சி ( Assistant Commissioner) வந்து, ‘சார், இவர்கள் வேண்டும் என்றே கூட்டத்தைப் போட்டுப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த வழியே போகக் கூடாது என்பதற்காகவே ப்ளான் பண்ணித் தடுக்கிறார்கள்’ என்று சொன்னார். பிறகு அவர் என்னை அழைத்துக்கொண்டு வேறொரு வழியாக வந்து கூட்டத்திற்குப் போனோம்.
கிட்டத்தட்ட அவர் ஒரு மணி நேரம் உட்கார்ந்தாரு. போன உடனே மகாலிங்கம், ‘அண்ணன் பின்னால வந்துட்டு இருக்காரு, நீங்க உட்காருங்க’ன்னு சொல்லிட்டு ஒரு ரூம்ல உட்கார வச்சாங்க. அவர் வந்து அந்த ரூமுக்கு பக்கத்துல என்னை கடந்து பார்த்துட்டு, திரும்ப அங்க போயிட்டு திரும்ப வந்து மண்டபத்துக்குள்ள போயிட்டாரு – என்னை கூப்பிடாம. அன்னைக்கு நடந்தது இது.
இப்பவும் சேர்ந்து நடக்கிறது தான் பொதுக்குழு. வரவேற்புரை சொல்லியாச்சு. இறந்தவர்களுடைய இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றியாச்சு. அதற்கு பின்னாலே நான் எழுந்து ஆண்டினுடைய வரவு செலவு கணக்கை வாசிக்க வேண்டும். அதற்கு கூட வாய்ப்பு கொடுக்கல. சி.வி. சண்முகம் எழுந்து ’23 தீர்மானங்கள் ரத்து செய்யப்படுகிறது, ரத்து செய்யப்படுகிறது’ன்னு டப டபன்னு சொல்லி அப்படியே உட்கார்ந்துட்டார்.
தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே தீர்மானம் ரத்து செய்யப்படுகின்ற அந்த உரிமை யாருக்குன்னா பொதுக்குழுவிற்கு தான் உண்டு. பொதுக்குழு விவாதம் பண்ணி அது நிறைவேற்றப்படணும், இல்லாட்டி தீர்மானத்தை ஏதாவது ஒன்றிலிருந்து நீக்கலாம். இவரே பூரா தீர்மானத்தையும் நீக்கிடுறாரு. இது மிகப்பெரிய சட்ட விரோதம்.
நடைபெற்ற பொதுக்குழு – அதற்கு முன்னால் நடைபெற்ற பொதுக்குழுவிலே ஜெயலலிதாவைத்தான் நிரந்தரப் பொதுச்செயலாளர், ‘நிரந்தரப் பொதுச்செயலாளர்’ அப்படின்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதன்பின்னால் நம்ம யாரை எந்த மீட்டிங்ல பேசினாலும் ‘அம்மா உயிரோடு இருந்தபோது’ன்னு சொன்னோம், ‘அம்மா மறைந்த பிறகு’ன்னு சொன்னோம். அதை வந்து இவங்க என்ன செய்றாங்க, அதை நீக்கிட்டு இவரைப் பொதுச்செயலாளராக அறிவிக்கிறாங்க பொதுக்குழுவிலே.
இதெல்லாம் வந்து ரெண்டு பேர் இருக்கிறது இல்லை. இந்த வர்றதெல்லாம் பண்ணிக்கிட்டு நாங்க போன பின்னாடி, ‘சரி இதெல்லாம் சரியா போயிட்டு இருக்கு, வரவு செலவு கூட படிக்க விடாம என்ன செய்றாங்க, திட்டம் போடுறாங்க, கலவரத்தை உருவாக்குறாங்க’ன்னு சொல்லிட்டு நான் வந்து அவர்கிட்ட சொல்றேன்… ‘என்ன செய்றாங்க?’ – ‘சரி வாங்க போயிடலாம்’. அங்க போயிட்டு இருக்கும்போது நானும், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்… நாங்க மூன்று பேரும் அங்கிருந்து பேசிக்கிட்டு வர்றோம்.
பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீச்சு
எங்கள் மீது வந்து தண்ணீர் பாட்டில் எடுத்து அடிக்கிறாங்க. நான் கழகத்தினுடைய பொருளாளராக இருக்கிறேன், துணை முதலமைச்சராக இருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் பிடிச்சுப் பிடிச்சு எல்லா இடைத்தேர்தலிலும் நான் தான் பொறுப்பேற்று, செய்து கொடுத்திருக்கிறேன். மதுரை நடந்த மேற்கு, ராஜபாளையம் இடைத்தேர்தல், செல்லூர் இடைத்தேர்தல், திருமங்கலம் இடைத்தேர்தல் வரைக்கும் நான் பொறுப்பாளராக இருந்த இடைத்தேர்தல்ல நிறைவாக செய்து முடித்திருக்கிறேன். கொஞ்சம் கூட ஒரு மரியாதை இல்லாமல், பன்னீர்செல்வம் என்ற நபர் அரசியலில் எந்த மூலையிலும் இருக்கக் கூடாது என்ற தவறான முடிவெடுத்து எல்லா காரியத்தையும் ஒன்றொன்றாக செஞ்சிட்டு வர்றாங்க.
2-வது பொதுக்குழுவும் அதிமுக அலுவலக வன்முறையும்
இரண்டாவது பொதுக்குழு கூட்டம். இரண்டாவது பொதுக்குழுவில நான் கையெழுத்துப் போடல. என்னுடைய அனுமதி இல்லாம கூட்டறாங்க. புதுசா ஒரு தலைவரை, அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவர் கையெழுத்துப் போட்டு அனுப்புறார். இது என்ன அநியாயமா இருக்குன்னு சொல்லிட்டு, ”நாம எல்லாம் சேர்ந்து தலைமை கழகத்துக்கு போய் உட்கார்ந்துப்போம்”னு ஒரு டெம்போ டிராவலர் ஏறி தலைமை கழகம் வரோம்.
அதிமுக தலைமை கழகத்துல ஒரு கிலோமீட்டர் தூரம் இந்தியன் பேங்க். நாங்க இந்தியன் பேங்க் கிட்ட வரும் போது 8 மாவட்ட செயலாளர்கள் தலைமை கழகத்தை உள்ளேயும் வெளியேயும் பூட்டிட்டாங்க.. வெளியே ஒரு 300, 400 ரவுடிகளை, கேடிகளை உட்கார வச்சாங்க. அப்ப எங்களுக்கு தகவல் வரும்போது வருது, எதுக்கு இந்த வேலையைச் செஞ்சுட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டு இந்தியன் பேங்க் கிட்ட நிக்கிறேன். எங்க மேல கொலைவெறி தாக்குதல் நடந்தது.. நாங்க வந்த டெம்போ டிராவலரை அடித்து நொறுக்கினார்கள்.
என்னை இப்படி சீண்டிட்டாங்கன்னு சொல்லிட்டு அவங்களை விரட்டிட்டு தலைமை கழகத்தையும் தாண்டி வந்தோம்.. நாங்க அப்படியே மெதுவா வந்து தலைமை கழகத்துக்கு போறோம். தலைமை கழகத்தோட கதவு திறந்திருக்கு. உள்ள போய் பார்த்தேன். அங்க நிலைமை சரியில்லாததுனால அங்க உட்கார்ந்துட்டு நாங்க வந்தோம்.. ஆனால் நாங்க தலைமை கழகத்தை உடைச்சோம்ன்னு ஒரு கதையை இன்னைக்கும் சொல்லிட்டு இருக்காரு எடப்பாடி.
இந்த பன்னீர்செல்வம் தலைமை கழகத்தை உடைக்கிற பண்பில் வளர்ந்தவனா? எனக்கு தனிப்பட்ட முறையில அனைத்து மக்களுக்கும் தெரியும், கட்சிக்காரங்களுக்கும் தெரியும். அதை நான் செய்வேனா? என்ற கேள்வியை நான் பொதுமக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் விட்டுவிடுகிறேன்.
11 தேர்தலில் தோல்வி
சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல்னு 11 தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாபஸ், போட்டி போடாம இருந்திருக்கு. ஒரு தேர்தலில் கூட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் வெற்றி பெற்றார்களா? இல்லை. அதான் இன்னைக்கு இருக்குற நிலைமை. இன்னைக்கு இருக்கற நிலைமையும் அதான்.
6 ஓபிஎஸ்ஸை நிறுத்திய எடப்பாடி
நாடாளுமன்றத் தேர்தல்ல 7 தொகுதியில டெபாசிட் காலி. நான் ராமநாதபுரத்தில நின்றேன். என்னை எதிர்த்து தேடிக் கண்டுபிடிச்சு ஆறு பன்னீர்செல்வத்தை ஓ. பன்னீர்செல்வம், ஓ. பன்னீர்செல்வம், ஓ. பன்னீர்செல்வம்ன்னு ஆறு பேரை நிப்பாட்டி வச்சிருக்காங்க. அந்த ஒரிஜினல் ஓ. பன்னீர்செல்வம் யாருன்னு மக்களுக்குத் தெரியும். நான் ஒருத்தன்தான் நிக்கிறேன். போட்டிக்கு கொண்டு வந்து நிறுத்தினது யாரு? எடப்பாடி தான்.
எம்.ஜி.ஆர் உயிரு கொடுத்து காப்பாத்துன கட்சி இன்னைக்கு இந்த நிலைமையில இருப்பதற்கு காரணம் எடப்பாடி தலைமைதான். இந்த நிலைமைக்கு காரணம் அவங்கதான்.
திமுகதான் ஜெயிக்கும் என சொன்ன அமித்ஷா
கட்சி பிளவுபட்டுக் கிடக்கிறது… கட்சி இணையணும். அமித் ஷா என்னை கூப்பிட்டு விட்டார், பன்னீர்செல்வம் இந்த மாதிரி தப்பிதமா சொல்ல மாட்டேன், அவரைப் பற்றி என்னிடம் தனிப்பட்ட முறையில் விசாரிச்சார், நானும் பேசினேன்.
அமித்ஷா சொன்னாரு,, ‘பன்னீர்செல்வம் ஜி, நீங்களும் நானும் சொல்லியும் எடப்பாடிகிட்ட எவ்வளவு சொன்னோம்… கேட்டாரா? ஆட்சியை இழந்துட்டு இப்போ நடுத்தெருவுல நிக்கிறாரு’. முடிஞ்சு போச்சா 5 வருஷம்! இப்ப அவங்க (திமுக) கூட்டணியை அப்படியே தக்க வச்சிருக்காங்க, ஒரு ஆள் கூட வெளியே வரலை அந்த கூட்டணியில இருந்து. இந்தக் கூட்டணி இப்போ பலமான கூட்டணியா இருக்கு. உறுதியா அவங்களே ஜெயிப்பாங்க.
‘நீங்க பிரிஞ்சு கிடந்து எப்படி ஜெயிக்க முடியும்னு சொல்லுங்க’னு என்கிட்ட கேட்டாரு.
‘அய்யா நான் இணையணும்னுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன். சின்னம்மாவை கூப்பிட்டா வருவாங்க, டிடிவி யை கூப்பிட்டா வருவாங்க, எடப்பாடியை கூப்பிட்டா வருவாங்க, பன்னீர்செல்வத்தை கூப்பிட்டா வருவாங்க’ன்னு சொன்னேன். நான் இப்போ கூட வந்திருக்கேன், ஏன்னா நான் கூட்டணியை (NDA) விட்டு வெளியே போயிட்டேன். இருந்தாலும் இங்க வந்துட்டேன். ‘கட்சியை இணைச்சிடுவீங்க… பெரிய புண்ணியம்’னு கும்பிட்டேன்…
எதையுமே எடப்பாடி பழனிசாமி கேட்கலையே.. நான் என்ன செய்ய? நான் ஏதாவது சங்கர மடத்துல போய் சேர்ந்துடவா? சொல்லுங்க… இவ்வளவு அநியாயத்தை ஏத்துக்கிட்டு இன்னும் இங்கயே உயிரை விட்டுக்கிட்டு இருக்கிற பன்னீர்செல்வத்தோட அரசியல் நிலை என்னன்னு நீங்களே சொல்லுங்க. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
