1 விழுக்காடு, அரை விழுக்காடு வாக்கு சதவிகிதம் வைத்திருக்க கட்சிகளுக்கெல்லாம் பேரம் பேசி சீட் கொடுக்கிறார்கள். ஆனால் 8.5 விழுக்காடு வைத்துக்கொண்டு நாம் தமிழர் எப்போதும் தனியாக நிற்கும் என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
“மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” என்ற பெயரில் திருச்சியில் இன்று (பிப்ரவரி 21) நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.
இதில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். காரைக்குடியில் தான் போட்டியிடப்போவதாகவும் கூறினார்.
இம்மாநாட்டில் தொடர்ந்து பேசிய சீமான், “எங்களின் அரசியல் இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலிலிருந்து முற்று முழுதாக மாறுபட்டது. அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்ற புரிதலோடு வந்த பிள்ளைகள் நாங்கள். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல்.
எமக்கான மூச்சுக்காற்றை நாங்களே சுவாசிப்பது போல, உணவை நாங்களே உண்பது போல, எமது உரிமையை எமது விடுதலையை நாங்களே போராடிப் பெறுவது என்ற நோக்கோடு வந்தவர்கள்.
எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல; ஆட்சி முறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் இலக்கு.
கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல நாங்கள்; அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டுப் புத்தம் புதிதாகப் புதிய ஒரு கட்டடத்தைக் கட்ட வந்த புரட்சிவாதிகள்.
இங்கே மக்களுக்கான அரசியல் இல்லை; செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே இருக்கிறது. சேவை மற்றும் செயல் அரசியல் இல்லை” என்று கூறினார்.
ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால்,அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என்று கூறிய சீமான், “பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வனக்கொள்ளை, மது-மத போதை – இது ஏதுமற்ற புதிய ஒரு தேசத்தைச் செய்வோம்.
2016-ல் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், கொண்ட உறுதி மற்றும் லட்சியச் சுமையால் தொடர்ந்து எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம்” என்றார்.
மேடைக்கு முன் கூடியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து இது ரசிகர்கள் கூட்டம் இல்லை.. லட்சிய கூட்டம் என்று கூறிய சீமான், ”8.5 விழுக்காடு வாக்கு வைத்திருக்கிறோம்… பணமும் பதவியும் சீட்டும் நோட்டும் தான் என்றால்… நாம் தமிழர் கட்சி பணத்திற்காக இல்லை, என் இனத்திற்காக
இந்தித் திணிப்புக்கு எதிராகத் தன் உயிரைத் தந்த பாட்டன் நடராஜன் மற்றும் தாளமுத்து தொடங்கிய மொழிப் புரட்சி இன்னும் தொடர்கிறது. இனம் செத்துவிடக்கூடாது என்று செத்தார்கள் நமது முன்னவர்கள்… வீழ்ந்த தமிழினம் எழுந்தது மறுபடியும் போரிட்டு வென்றது என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும். விழுவோம் விதையாய், எழுவோம் விடுதலையாய் என்ற லட்சிய முழக்கத்தை முன்வைத்து, அடுத்த ஆண்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் பேசிய சீமான், ”என்னம்மா தேவி ஜக்கம்மா.. நாடு நாசமா போகுதே நியாயமா? கண்ண தொறந்து பாறம்மா.. எங்க கவலைய கொஞ்சம் தீரம்மா… 10 லட்சம் கோடி கடனுல நாடு… இதுல இலவசங்கள் பெரு வெட்க கேடு… பாக்க சகிக்கல சனம் படும் பாடு… இதை வளர்ச்சினு போடுறான் போடு” என்று பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
