ADVERTISEMENT

NTA தேர்வு: தமிழக மாணவர்களுக்கு மீண்டும் வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள்- கடும் கொந்தளிப்பு!

Published On:

| By Mathi

NTA Exam

தேசிய தேர்வு முகமை NTA நடத்தும் SWAYAM தேர்வுகளுக்காக தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் சு.வெங்கடேசன், பி.வில்சன் ஆகியோர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ADVERTISEMENT

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பி.வில்சன் எம்.பி. அனுப்பிய கடிதம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எட். மாணவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாத SWAYAM (Study Web of Active learning by Young and Aspiring Minds) செமஸ்டர் தேர்வுகளை டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் எழுதவிருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட – பலரும் தாங்கள் தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்திருந்த போதிலும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள மைசூர், மங்களூர், பெங்களூர் போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) யின் இந்த நடவடிக்கை நியாயமற்றது மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நலனுக்கு தீவிரமாக கேடு விளைவிப்பதாகும்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பி.எட். மாணவர்கள் SWAYAM தேர்வு மூலமே தங்களது பல்கலைக்கழகப் பாடத்திட்ட முடிவுச் சான்றிதழைப் பெற வேண்டிய நிலை உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், மாணவர்களை பல நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேறு மாநிலங்களுக்கு பயணிக்க வைப்பது – குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏற்க இயலாத அளவுக்கு பெரும் சுமையை மாணவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

தேர்வுக்கு பத்து நாட்களுக்கும் குறைவாக மட்டுமே உள்ள நிலையில், இந்த வகை ஒதுக்கீடுகள் மாணவர்களின் மனஅழுத்தத்தையும், அவர்களின் தயாரிப்பையும் கடுமையாக பாதிக்கின்றன.

இந்த அநீதியை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இது எதேச்சையாக நடந்த நிகழ்வாக தெரியவில்லை, NTA நடத்த கூடிய NEET, NEET-PG உள்ளிட்ட பல தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும், ஆட்சேர்ப்புத் தேர்வுகளிலும் இதே போன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து, பரவலான விமர்சனங்களையும், நாடாளுமன்றத்தில் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

இவை தொடர்ந்து நிகழ்வது வெறும் கவனக்குறைவு அல்ல, மாறாக NTA-யின் அமைப்பு ரீதியான தோல்வியையே காட்டுகிறது;

நியாயமான தேர்வு முறையை உறுதி செய்ய அது தவறிவிட்டது என்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டுக்குள் போதிய அளவு தேர்வு மையங்கள் இருந்தும், மாணவர்களை அண்டை மாநிலங்களுக்கு தள்ளுவது தவிர்க்க முடியாத கஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கல்வி எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளுகிறது.

இது தேர்வுகளின் வெளிப்படைத் தன்மை , சம வாய்ப்பு, மாநில நலன்கள் உரிமைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

எனவே, தேர்வு தேதி நெருங்கிவரும் சூழலில், பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் உடனடியாக தேர்வு மையங்களை மாற்றி தமிழ்நாட்டிற்குள்ளேயே மறு ஒதுக்கீடு செய்யுமாறும், குறிப்பாக மாணவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு முன்னுரிமை அளித்து – தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யுமாறும் NTA-க்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கும்படி உங்களை அவசரமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அநீதியை உடனடியாக சரிசெய்யத் தவறினால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆசிரியர் கனவு பறிபோகும் அவல நிலை ஏற்படும்.

மேலும், தேசியத் தேர்வுகள் இனிமேலாவது எந்த ஒரு மாநிலத்தையும் பாதிக்காத வகையில் நடைபெறவும், வெளிப்படைத்தன்மை, அணுகல்தன்மை, நேர்மை ஆகியவை நமது நாட்டின் கல்விக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளாகத் தொடர்ந்து இருக்கவும் உங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பி.வில்சன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share