தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்), சிறந்த கல்லூரி பல்கலைக் கழகங்களின் பட்டியலை இன்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளது.
நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை, ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் செயல்திறன் மற்றும் தரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு அறிவிப்பு வெளியிடும்.
அப்படி இந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பொறியியல் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 7 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
திருச்சியில் செயல்பட்டு வரும் என்.ஐ.டி நிறுவனம் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வியில் ஐஐடிகளின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை இந்த தரவரிசை எடுத்துக்காட்டுகிறது.
அதேசமயம் உயர்நிலைப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஐஐடி அல்லாத நிறுவனமாக திருச்சி என்ஐடி தனித்து நிற்கிறது. இந்த ஆண்டு முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே என்.ஐ.டி திருச்சி என்.ஐ.டி ஆகும்.
சிறந்த கல்லூரிகள் வரிசையில், டெல்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 9ஆவது இடத்தையும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான என்.ஐ.ஆர்.எப் பட்டியலில் 3வது இடத்தை வேலூர் சிஎம்சி பிடித்துள்ளது.
மாநில அரசின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் அண்ணா பல்கலைக் கழகம் நாட்டிலேயே 2வது இடத்தை பிடித்துள்ளது.