ADVERTISEMENT

“ஐஏஎஸ் அதிகாரிகளை பாதுகாக்க நினைக்கவில்லை” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் அரசு பதில்!

Published On:

| By Kavi

எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கில் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில், சுமார் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 3) விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ்,  ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்துகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார். 

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  ‘இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குமாறு மத்திய அரசின் முன் உள்ள கோரிக்கையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த  கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன், ‘எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கம் அரசுக்கு இல்லை.  ஒருவேளை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அந்த ஐஏஎஸ் அதிகாரிகளை குற்றம்சாட்டப்பட்டவராக வழக்கில் சேர்த்திருக்கமாட்டோம்.  எனினும் நாங்கள் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதில் இன்னும் விரைவாக செயல்பட்டிருக்க வேண்டும்’ என்று கூறி, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார். 

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share