எதிரணியில் இருப்பது அதிமுக தலைமையிலான கூட்டணி அல்ல, பாஜக தலைமையிலான கூட்டணி என்று கனிமொழி கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகரில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, “உழைப்புக்கு சொந்தக்காரராக, உறக்கம் என்றால் என்னவென்றே தெரியாத தலைவராக நமது முதல்வர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். உழைப்பு மட்டுமில்லை உறுதி என்றாலும் அவர்தான். பாசிச சக்திகளை எதிர்க்கக் கூடிய உறுதிமிக்க தலைவரும் அவர்தான். தென்னிந்தியாவின் இரும்பு மனிதர்.
செந்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் என்று எல்லோராலும் பாராட்டப்படக்கூடியவர்” என்று புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து மற்றவர்களை வரவேற்று பேசிய கனிமொழி, “இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும் போது உதயநிதிக்கு வாழ்த்து மட்டும் சொல்ல தோன்றவில்லை. வெற்றி நமதே என்று சொல்ல தோன்றுகிறது.
பெண்களும், இளைஞர்களும் யாரோடு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சிலர் குழப்ப நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு முன் நடந்த வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு மூலமும், இளைஞரணி சந்திப்பு முலமும் நான் உறுதியாக சொல்கிறேன் பெண்களும், இளைஞர்களும் நமது முதல்வரோடுதான் இருக்கிறார்கள்.
யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. அது அதிமுக தலைமையிலான கூட்டணி அல்ல பாஜக தலைமையிலான கூட்டணி.
கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் பிரதமரோடு கைகோர்த்து நிற்கிறார்கள். எந்த பிரதமரோடு… சில நாட்களுக்கு முன்னால் டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னாள், நமது முதல்வர் எக்ஸ் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டார். அதில் தேர்தல் வருகிறது. அதனால் தமிழகத்துக்கு ஏதாவது தருவார்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
ஆனாலும் கூட தமிழ்நாட்டுக்கு அள்ளி இல்லை கிள்ளி கூட கொடுக்கமாட்டேன் என்று இருக்கக்கூடிய பாஜகவோடு துரோக கூட்டணி வைத்திருக்கின்றனர்.
ரயில்வே திட்டங்களை எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிரத்துக்கு 24 ஆயிரம் கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு 20 ஆயிரம் கோடி, குஜராத்துக்கு 17 ஆயிரம் கோடி கொடுத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு 7,600 கோடி தான் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த துரோகத்தோடு கைகோர்த்துதான் எதிரணி உருவாகியிருக்கிறது. நமது பிள்ளைகளுக்கு நிதி கேட்டு போராடுறோம். ஆனால் இந்தியை திணிப்பேன், அதை ஏற்றுக்கொண்டால் தான் நிதி கொடுப்பேன் என்று சொல்லுபவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
100 நாள் வேலை திட்டத்தையே ஒழிப்பதற்காக காத்திருக்கும் ஒரு அராஜக கூட்டத்தோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள்” என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், “நாங்கள் டிரம்ப்போடு வர்த்தக ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்… அது பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார்கள்…. நாம் அனுப்பும் பொருளுக்கு 18 சதவிகிதம் வரி. அங்கிருந்து வரும் பொருளுக்கு வரி கிடையாது. மாட்டுக்கு புல்லை கூட 10000 ஏக்கரில் விளைவிக்கும் அந்த நாட்டுடன் நாம் போட்டி போட முடியுமா? நமது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நமது கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல பிரதமர் தயாராக இல்லை.
ஆனால் அவை தலைவர், ’பிரதமர் வரமாட்டார்’ என்கிறார். குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானம் பிரதமர் பேசாமல் நிறைவேற்றப்பட்டது. இப்படி நடப்பது இதுதான் முதல்முறை” என்று கூறி பாஜக அரசை விமர்சித்து பேசினார்.
